தமிழ்நாடு

நடிகை கௌதமி சொத்து மோசடி வழக்கு: சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

நடிகை கௌதமியின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை மற்றும் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகை கௌதமி சொத்து மோசடி வழக்கு: சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
ED Raid
நடிகை கௌதமியின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் சென்னை மற்றும் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கௌதமி. தனக்கு உடல்நிலை சரியில்லாத காலகட்டத்தில், தனது சொத்துக்களை நிர்வகிப்பதற்காகக் காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவருக்கு அவர் பொது அதிகாரம் கொடுத்திருந்தார். அதனைத் தவறாகப் பயன்படுத்தி அழகப்பன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இணைந்து சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்துவிட்டதாகக் கௌதமி தமிழக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் அழகப்பன் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கௌதமிக்குச் சொந்தமான ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ராமநாதபுரம் நிலங்களை விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.11.17 கோடிக்கு விற்கப்பட்ட நிலத்திற்கு ரூ.4.10 கோடியை மட்டுமே அழகப்பன் தரப்பு கொடுத்துவிட்டு மீதித் தொகையை ஏமாற்றியுள்ளது. இதனால் கௌதமிக்கு ரூ.2.61 கோடி வருமான வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.65.31 லட்சம் செலுத்தியே அவர் கணக்குகளை மீட்டார். இதற்கிடையில், மோசடி செய்த பணத்தைக் கொண்டு அழகப்பன் குடும்பத்தினர் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோதமாகச் சொத்துக்களை வாங்கி முதலீடு செய்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழக காவல்துறையின் வழக்குகளை ஆதாரமாகக் கொண்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகை கௌதமி தகுந்த ஆவணங்களுடன் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, கௌதமியிடம் முதற்கட்டமாக 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை அண்ணா நகர், வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மதுரை உட்பட மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முக்கியமாக, மோசடியில் ஈடுபட்ட அழகப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகள், அலுவலகங்களை இலக்கு வைத்தே இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. இச்சோதனையின் முடிவில், வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.