தமிழ்நாடு

சூட்கேஸிற்குள் தலை இல்லாத ஆண் சடலம் கண்டெடுப்பு.. 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை!

பெரம்பூர் ரயில் நிலையத்தில், சூட்கேஸ் ஒன்றுக்குள் தலை இல்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூட்கேஸிற்குள் தலை இல்லாத ஆண் சடலம் கண்டெடுப்பு.. 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை!
Perambur Muder
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில், சூட்கேஸ் ஒன்றுக்குள் தலை இல்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடை படிக்கட்டில் கேட்பாரற்று கிடந்த புதிய சூட்கேஸ் ஒன்றை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கண்டெடுத்தனர். சந்தேகத்தின் பேரில் அதனைத் திறந்து பார்த்தபோது, உள்ளே நிர்வாண நிலையில், தலை இல்லாத சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையை முடுக்கிவிட்டுள்ள 4 தனிப்படைகள்

இந்த கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாகப் பெரம்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்கப் புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் முத்துக்குமார் தலைமையில் 2 தனிப்படைகளும், ரயில்வே டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் 2 தனிப்படைகளும் என மொத்தம் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலைச் சேகரித்து, அதன் அடிப்படையில் கொலையுண்ட நபர் யார் என்று கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், சடலத்தின் டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சிசிடிவி பழுது; விசாரணையில் சிக்கல்

கொல்லப்பட்டவரின் உடலில் வேறு காயங்கள் ஏதும் இல்லாததால், அவரை முதலில் மயக்கமடையச் செய்து, அதன் பின்னரே தலையைத் துண்டித்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததும், இருக்கும் சில கேமராக்களும் பழுதாகி இருப்பதும் கொலையாளிகளைக் கண்டறிவதில் போலீஸாருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனினும், உடல் வைக்கப்பட்டிருந்த புதிய சூட்கேஸை ஆதாரமாகக் கொண்டு, தனிப்படை போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இன்னும் சில தினங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.