தமிழ்நாடு

துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Chennai Highcourt
தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்ப உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகார குழுவை நியமிக்க கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுக்கும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 20 அரசு பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகம் துணை வேந்தர்கள் பதவிகள் காலியாக உள்ளதாக கூறி செங்கல்பட்டை சேர்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர் பாஸ்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஐந்து பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் பதவிகள் இந்த ஆண்டின் இறுதியுடன் காலியாக உள்ளதாக சுட்டிகாட்டியுள்ளார். முந்தைய ஆட்சி காலத்தில் அரசியல் சாசன அதிகார அமைப்பிற்கும், அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு காரணமாக துணை வேந்தர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் இருந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.

துணை வேந்தர்கள் பதவிகள் காலியாக உள்ளதால் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளாதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்திலும் இதே போன்ற ஒரு நிலை நிலவிய போது உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையில் குழு அமைத்ததை போல தமிழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்புவதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் பல்கலைகழக மானிய குழு பிரதிநிதியை சேர்த்து உயர் அதிகாரம் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, மனுவிற்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவிற்கும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.