சினிமா

நடிகை பாலியல் வழக்கு: "இது எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம்"- நடிகர் திலீப் பரபரப்பு பேட்டி!

நடிகை பாலியல் வழக்கு தனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம் என்று நடிகர் திலீப் கூறியுள்ளார்.

நடிகை பாலியல் வழக்கு:
Actor Dileep
கேரளாவில் பிரபல நடிகை ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுதலை செய்யப்பட்ட நடிகர் திலீப், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்த வழக்கு தனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வழக்கின் பின்னணி மற்றும் விடுதலை

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துப் பிரபலமான நடிகை ஒருவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தூண்டியதாகக் கூறி நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இதில் 85 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் திலீப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

8 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (டிசம்பர் 8) நீதிமன்றம் 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. அதேசமயம், நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோருக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்தது.

திலீப் அளித்த பேட்டி

விடுதலைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் திலீப், "நடிகை பாலியல் வழக்கு எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம் ஆகும். இந்த வழக்கில் எனக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால்தான் நீதிமன்றம் என்னை விடுதலை செய்திருக்கிறது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆரம்பம் முதலே நான் கூறி வருகிறேன். எனக்கு உறுதுணையாகவும் எனக்காக பிராத்தனை செஇதய அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கிறேன்" என்றார்.

நடிகை தரப்பு மேல்முறையீடு

இதற்கிடையே, நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.