சினிமா

அனுஷ்காவின் ‘காதி’ பட ட்ரெய்லர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!

கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதி’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

அனுஷ்காவின் ‘காதி’ பட ட்ரெய்லர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!
Anushka's 'Ghaadi' trailer released
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, ‘காதி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘அருந்ததி’ என்ற பேய் படத்தின் மூலம் பிரபலமான அனுஷ்கா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்த வரவேற்பை பெற்றார். பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த அனுஷாவுக்கு, ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு சரியான படம் அமையவில்லை.

மேலும் அவருக்கு வயது 40-ஐ கடந்துவிட்டதால் படவாய்ப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், அனுஷ்கா தற்போது ‘காதி’ என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இது இவரது 50-வது படமாகும். இந்த படத்தில், நடிகர் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ள இந்த படத்தை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜாகர்லமுடி இணைந்து தயாரித்துள்ளனர்.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்துக்கு நாகவெல்லி வித்யா சாகர் இசையமைத்துள்ளார். தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகியுள்ள இப்படம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இதனைத்தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான 'சைலோரே' எனத்தொடங்கும் பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. லிப்சிகா பாஷ்யம் மற்றும் நாகவெல்லி வித்யா சாகர் பாடியுள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார்.

இதையடுத்து, படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், படக்குழுவினரை சமூக வலைதளங்களில் டேக் செய்த ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர். இந்த நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லரில் அனுஷ்கா அதிரடி சண்டை காட்சிகளில் தோன்றுவது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. மேலும், படத்தின் வெளியீட்டு தேதியும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.