சினிமா

சின்ன தல ஆன் போர்டு.. தமிழ் சினிமாவில் களமிறங்கும் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

சின்ன தல ஆன் போர்டு.. தமிழ் சினிமாவில் களமிறங்கும் ரெய்னா
Raina to make her debut in Tamil cinema
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. கிரிக்கெட் ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர், தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்குகிறார்.

புதிய தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ‘மான் கராத்தே’, ‘ரெமோ’, ‘கெத்து’ ‘ரெட்டத்தல’ போன்ற திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றிய இயக்குநர் லோகன் இந்த படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை சந்தீப் கே. விஜய் மேற்கொள்கிறார்.

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய அணியின் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷிவம் டூபே ரெய்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் வீடியோ கால் மூலம் கலந்துகொண்ட ரெய்னா, “தமிழ்நாட்டில்தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. பல கிரிக்கெட் போட்டிகளில் இங்கு ஆடியிருக்கிறேன். ரசம், சென்னை கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழில் நடிக்கிறேன். மக்களின் அன்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது” என தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரெண்ட்ஷிப்’ படத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.