சினிமா

"அனிருத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு, எனக்கு இல்லை"- இசையமைப்பாளர் தமன் ஆதங்கம்!

"அனிருத்துக்கு தெலுங்கில் எளிதில் படம் கிடைப்பது போல், தனக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைப்பது மிகக் கடினம்" என்று இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.


Music Director Thaman
பிரபல இசையமைப்பாளர் தமன், 'அகண்டா 2' பட நிகழ்வில் கலந்துகொண்டபோது, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் நிலவும் வாய்ப்பு மற்றும் சம்பள வேறுபாடுகள் குறித்துத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

“அனிருத்துக்கு எளிது.. ஆனால் எனக்கு இல்லை!

தமன், ஈரம் மூலம் தமிழில் அறிமுகமாகி, வாரிசு, கேம் சேஞ்சர் உட்படப் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது அவர், நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'அகண்டா 2' படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், அப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தமன், அனிருத்துக்கு தெலுங்கில் எளிதில் படம் கிடைப்பது போல், தனக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைப்பது மிகக் கடினம் என்று குறிப்பிட்டார்.

தமிழ் சினிமாவின் ஒற்றுமை தெலுங்கில் இல்லை

தமிழ்த் திரையுலகம் 'நம் ஆட்களுக்கே வாய்ப்பு' என்று நினைப்பதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழ்த் திரையுலகில் உள்ள வலுவான ஒற்றுமை, தெலுங்குத் திரையுலகில் இல்லை என்றும் தமன் வெளிப்படையாகத் தெரிவித்தார். பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமா மீதுள்ள விருப்பத்தால் அல்ல, கோடி கோடியாய் பணம் கிடைக்கிறது என்பதற்காகவே இங்கு வந்து பணியாற்றுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

லட்சங்களில் சம்பளம் வாங்கியவர்கள், இங்கு வந்தவுடன் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள் என்றும், ஆனால் தன்னால் அவ்வளவு போலியாக வாழ முடியாது, தான் ரசிகர்களை மனதில் வைத்து உண்மையாகவே வேலை செய்வதாகவும் தமன் ஆதங்கம் தெரிவித்தார். இந்தப் போட்டி இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், திறமையுடன் வேலை செய்ய விரும்புவதாகவும் தமன் கூறினார்.