சினிமா

தக் லைஃப் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு தேதி அறிவிப்பு!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நபர், காவியக் காதல் கதைகளின் சிற்பி மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன்,சிம்பு நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தக் லைஃப் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு தேதி அறிவிப்பு!
Thuglife Audio Launch and Trailer Release date was announced
நீண்ட இடைவெளிக்குப் பின் மணிரத்னம்-கமல் இணையும் திரைப்படத்தின் தலைப்பு முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது, அது பலரின் கவனத்தை ஈர்த்தது. "தக் லைஃப்" என்ற சொல், குறிப்பாக ராப் இசை மற்றும் சமூகப் போராட்டங்களின் பின்னணியில் ஆழமான அர்த்தங்களைக் கொண்டது. துபாக் ஷகூர் பிரபலப்படுத்திய இந்த வார்த்தைகள், ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை, சமூக அநீதிக்கு எதிரான குரல் போன்றவற்றை பிரதிபலிக்கிறது.

மணிரத்னம் போன்ற ஒரு இயக்குனர் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பது, படத்தின் உள்ளடக்கம் வழக்கமான சினிமா பாணியிலிருந்து மாறுபட்டதாகவும், அழுத்தமான சமூகக் கருத்துக்களைப் பேசக்கூடியதாகவும் இருக்கும் என்ற எண்ணத்தை ரசிகர்களிடையே விதைத்துள்ளது.

வலுசேர்க்கும் நடிகர் பட்டாளம்:

ஒருப்புறம் டைட்டில் என்றால், மறுப்புறம் "தக் லைஃப்" படத்தின் நடிகர்கள் பட்டாளம் மேலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. கமல்ஹாசனின் வித்தியாசமான தோற்றம் மற்றும் படத்தின் ஒளிப்பதிவு ஆகியவை மணிரத்னத்தின் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றன. ஏ.ஆர். ரஹ்மானின் இசை இப்படத்தின் ஆன்மாவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இதுவரை பல இசைப் பொக்கிஷங்களை நமக்கு வழங்கியுள்ளது.

டிரைலர் நாளை வெளியீடு:

இந்நிலையில் இத்திரைப்படம் ஜூன் 5 ஆம் உலகம் முழுவதும் திரையில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் எனவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல் வெளியீடு வருகிற 24 ஆம் தேதி நடைப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே வெளியான சிங்கிள் ட்ராக் ரசிகர்கள் மனதை கவர்ந்த நிலையில், தக் லைஃப் படக்குழுவின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.