சினிமா

‘இது என் ஊரு சார்..’ மதராஸி படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

‘இது என் ஊரு சார்..’ மதராஸி படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
Madharaasi movie Trailer
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். ‘தர்பார்’ படத்திற்குப் பிறகு ஐந்து வருட இடைவெளிக்குப் பின் முருகதாஸ் இயக்கியுள்ள தமிழ்ப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'டான்' படத்திற்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் பாடல்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர்

இப்படத்தின் முதல் பாடலான 'சலம்பல..' கடந்த ஜூலை 31-ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அனிருத் இசையமைத்து பாடிய இரண்டாம் பாடலான 'வழியிறேன்..' நேற்று வெளியான நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

செப்டம்பர் 5 ஆம் வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

மாஸ் ஆக்‌ஷன் ட்ரெய்லர்

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம், ட்ரெய்லர் மூலம் அதை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக “இது என் ஊர் சார், நானும் கூட நிப்பேன்” என சிவகார்த்திகேயன் பேசும் வசனம் மற்றும் வில்லன் கதாரத்திரத்தில் நடித்திருக்கும் வித்யூத் ஜம்வால், “துப்பாக்கி எவன் கையில இருந்தாலும், வில்லன் நான்தான்டா” என்று கூறும் வசனம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தில் வித்யுத் ஜம்வால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.