சினிமா

விஜய் உடன் உறவு மாறிவிட்டது.. அரசியல் கருத்து சொல்ல விரும்பவில்லை - இயக்குநர் மிஷ்கின்

விஜய் குறித்து அரசியல் கருத்துக்களை சொல்ல விரும்பவில்லை என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

விஜய் உடன் உறவு மாறிவிட்டது.. அரசியல் கருத்து சொல்ல விரும்பவில்லை - இயக்குநர் மிஷ்கின்
My relationship with Vijay has changed.. Director Mysskin
வேலூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல திரைப்பட இயக்குநர் மிஷ்கின், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

'எங்கள் உறவு மாறிவிட்டது..'

விஜயின் அரசியல் வருகை 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், "விஜய் ஒரு கடும் உழைப்பாளி. சினிமாவில் இருக்கும் வரை விஜய் என் தம்பியாக இருந்தார். அதனால் அவரை அன்பாக தம்பி என்று அழைத்தேன். இப்போது அவர் அரசியல் தலைவர் ஆகிவிட்டார். ஆகவே, எங்கள் உறவு மாறிவிட்டது. அவரைப் பற்றி அரசியல் கருத்துக்களை நான் சொல்ல விரும்பவில்லை" என்றார்.

தெரு நாய்கள் விவகாரம்

தெரு நாய்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், "முதலில் ஒரு தெருவுக்கு இரண்டு நாய்கள் மட்டுமே இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அது துன்புறுத்துகிறது, கடிக்கிறது. இந்த விவகாரத்தை இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய தத்துவத்திலேயே உயிர்வதை என்பது கொடுமையானது. ஒரு பிராணி என்பதும் உயிர் தான். எனவே, இதுபற்றி நிறைய படித்தவர்கள் கலந்தாலோசித்து, சரியான முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

'விஷால் என் குழந்தை'

நடிகர் விஷாலின் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "விஷால் என் குழந்தை. அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணும் எனக்குத் தெரிந்தவர். இருவரும் இணைவது எனக்கு மிகுந்த சந்தோஷம். விஷால் என்னை திருமணத்திற்கு அழைக்கவே வேண்டாம். நான் அவனுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன். திருமணம் நடக்கும் நாள் அன்று நான் தள்ளி நின்றே இரவு முழுவதும் அவனுக்காகப் பிரார்த்தனை செய்வேன்" என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.

'இளையராஜாவின் பாட்டு ஒரு தாய்ப்பால் போன்று'

இசையமைப்பாளர் இளையராஜா குறித்த கேள்விக்கு, "இளையராஜா நமக்கு ஒரு தாய், தந்தை மாதிரி. சினிமாவில் அதிக இசையமைப்பாளர்கள் இருக்கும்போது அவருடைய பாடலை ஏன் மீண்டும் எடுக்க வேண்டும், புதிதாக இசையமைத்துக்கொள்ளலாமே. நமக்கெல்லாம் இளையராஜாவின் பாட்டு ஒரு தாய்ப்பால் மாதிரி இருந்திருக்கிறது" என்று பதிலளித்தார்.