சினிமா

கேமரா இப்போது என் நண்பன்: மகா கும்பமேளாவின் வைரல் பெண் மோனாலிசா!

16 வயதான மோனாலிசா தனது முதல் இசை வீடியோவான “Saadgi" -யினை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். போபாலில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ’கேமரா இப்போது என் நண்பன்’ என மனம் திறந்துள்ளார்.

கேமரா இப்போது என் நண்பன்: மகா கும்பமேளாவின் வைரல் பெண் மோனாலிசா!
Prayagraj Mahakumbh fame Monalisa Bhosle
பிரயாகராஜ் மகா கும்பமேளாவில் தனது தனித்துவமான அழகு மற்றும் புன்னகையால் அனைவரையும் கவர்ந்து, இணையத்தில் "மகா கும்பத்தின் மோனாலிசா" என்று அழைக்கப்பட்டு பிரபலமானவர் மோனாலிசா போஸ்லே.

மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்றுக்கொண்டிருந்த 16 வயது மோனாலிசாவை, ஒரு நபர் (content creator) வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். ஒரே இரவில் அவர் இணையத்தில் வைரலாகத் தொடங்கினார். அவர் கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. இதுப்போதாதா? கும்பமேளாவிற்கு சென்று இவரை பார்க்க வேண்டும் என்றே சிலர் பிரயாகராஜ் நோக்கி சென்றனர்.

மகா கும்பமேளாவில் கிடைத்த இந்த திடீர் புகழ், அவரது தந்தைக்கு சவாலாக அமைந்தது. மாலைகள் வாங்குவதை விட, மக்கள் அவரோடு செல்ஃபி எடுக்கவே அதிக ஆர்வம் காட்டினர். இதனால், அவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டது. மோனாலிசாவின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருதி, அவரது தந்தை அவரை சொந்த ஊரான இந்தூருக்கு அனுப்பி வைத்தார்.

கும்பமேளாவும் மறுப்புறம் முடிவுக்கு வந்தது. இருப்பினும், வைரலான அந்த பெண்ணின் புகழ் மட்டும் குறையவில்லை. பல புதிய வாய்ப்புகள் அவர் வீடு தேடி வந்தன. சமூக ஊடகங்களில் அவருக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் உருவானார்கள். இப்போது, "தி டைரி ஆஃப் மணிப்பூர்" என்ற இந்தித் திரைப்படத்தில் மோனாலிசா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உட்கார்ஷ் சிங் இசையில் உருவாகியுள்ள சாட்கி என்கிற இசை வீடியோவில் மோனாலிசா நடித்துள்ளார். தனது முதல் இசை வீடியோ என்பதால், அதனை ப்ரோமோட் செய்யும் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ப்ரோமோஷன் நிகழ்வொன்று மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மோனாலிசா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

மும்பையில் நிரந்தரமாக குடியேற திட்டம்:

”நான் இதற்கு முன்பு கேமரா முன் போஸ் கொடுத்ததில்லை. விளக்குகள், கேமரா மற்றும் என்னை சுற்றி பல நபர்கள் என எல்லாவற்றையும் பார்த்து ஆரம்பத்தில் நான் பதட்டமடைந்தேன். இதயத்துடிப்பு மிக வேகமாக அடித்தது. எந்த கேமரா என்னை பயமுறுத்தியதோ? இன்று அது எனக்கு ஒரு நல்ல நண்பன். தனது பதட்டத்தைக் குறைப்பதில் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பெரும் பங்கு வகித்தார்” என மோனலிசா தெரிவித்தார்.

மும்பையில் வீடு வாங்கி குடியேற திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஆம்.. அது உண்மை தான். எனக்கு மும்பை மிகவும் பிடிக்கும், அங்குள்ள மக்களும் மிகவும் நல்லவர்கள். எனக்கு இங்கேயே தங்க வேண்டும் போலிருக்கிறது. இப்போது, ​​வீடு வாங்குவதற்காக பணத்தை சேமித்து வருகிறேன்" என பதிலளித்தார்.

watch the video: SAADGI Song | Utkarsh Singh ft. Monalisa | Official Music Video

சமூக வலைத்தளத்தால் சாதாரண நபராக இருந்த ஒருவர், ஒரே இரவில் எவ்வளவு பிரபலமாகியுள்ளார்? என இன்னும் பலர் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி, தன்னுடைய திறமையினை வளர்த்துக் கொண்டு தனது கனவினை வெல்லும் முனைப்பில் முதல் அடி எடுத்து வைத்துள்ளார் மோனாலிசா. இவரது முதல் இசை வீடியோ வெளியான 4 நாட்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.