சினிமா

"பராசக்தி படத்தை OTT-யில் வெளியிட தடையில்லை"- உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என, பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.


Parasakthi Movie Case
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம் நாளை (பிப்.07) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தின் கதைத் திருட்டு வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கின் பின்னணி

இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தான் எழுதிய 'செம்மொழி' என்ற கதையைத் திருடி, 'பராசக்தி' என்ற பெயரில் படமாக எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

தயாரிப்பு நிறுவனத்தின் பதில் மனு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில், படத் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 1965-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. இத்தகைய வரலாற்றுச் சம்பவங்கள் அல்லது சமூகப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கதை எழுத யாருக்கும் தனிப்பட்ட காப்புரிமையோ (Copyright) அல்லது தனியுரிமையோ கிடையாது.

படத்தின் கதைக்களம் வேண்டுமானால் போராட்டக் காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள், உணர்ச்சிகரமான வசனங்கள் மற்றும் திரைக்கதை அமைப்பு ஆகியவை முற்றிலும் கற்பனையானவை; அவை ஒரு படைப்பாளியின் தனித்துவமான உழைப்பு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் முடிவு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'பராசக்தி' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 9-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார். இதனால் திட்டமிட்டபடி இத்திரைப்படம் நாளை 'ஜீ 5' (Zee5) ஓடிடி தளத்தில் வெளியாகிறது.