இந்தியா - பாக். போர் பதற்றம்

போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படை தளபதிகள், ஆயுதப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ட்ரோன் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.இதில் 5 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய கட்டடங்கள் சேதம் அடைந்தது.

பிரதமர் மோடி ஆலோசனை

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இருப்பினும் காஷ்மீர் சில கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இன்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இதனால் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பில் இன்று இரவும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுவதால் காஷ்மீர் எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் மருந்து கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மாலை இரவு 7 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் எல்லை பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய நிலைமை குறித்து டெல்லியில் உள்ள இல்லத்தில் முப்படை தளபதிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் விமானப்படை தளபதிகள், ராணுவத் தளபதிகள், கடற்படை தளபதிகள் பங்கேற்று முக்கிய ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.