இந்தியா - பாக். போர் பதற்றம்

"பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்" - இந்திய இராணுவம்

போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.


பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் - இந்திய இராணுவம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் கடந்த 8 மற்றும் 9ம் தேதி நள்ளிரவில் இருதரப்பிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லியமாக தாக்குதல் நடத்தி அனைத்தையும் அழித்துள்ளது.

கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இந்திய எல்லை பகுதியில் ட்ரோன், பீரங்கி, போர் விமானங்கள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் முப்படைகளும் தாக்குதலில் இறங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இரண்டு நாடுகளும் மாறி, மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இருநாடுகளுக்கும் மத்தியில், போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. காலை 5 மணியளவில் அமிர்தசரஸின் காசா கான்ட் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும், அவை அனைத்தும் வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகளையும், இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சதித்திட்டங்களையும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும், எதிரிகளின் திட்டங்களை துணிவோடு முறியடிப்போம் என்றும் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது.



தொடர்ந்து, மற்றொரு பதிவில், இந்திய இராணுவம் பயங்கரவாத ஏவுதளங்களை தகர்த்து வருவதாகவும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் கடந்த 2 நாட்களாக பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய இராணுவம் பயங்கரவாத ஏவுதளங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவற்றைத் தூள் தூளாக்கி, தகர்த்தெறிந்ததாகவும் தெரிவித்துள்ளது.

எல்லைக்கோடு அருகில் அமைந்துள்ள பாகிஸ்தான் பயங்கரவாத ஏவுதளங்கள், கடந்த காலங்களில் இந்திய பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூலமாக செயல்பட்டதாக கூறியுள்ள இந்திய இராணுவம், பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.