ஐபிஎல் 2025

ஐபிஎல் பைனல்: கடைசி நேரத்தில் மைதானத்தை மாற்றிய பிசிசிஐ.. என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப் போட்டி நடைப்பெறும் இடத்தை கொல்கத்தாவிலிருந்து அகமதாபாத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் பைனல்: கடைசி நேரத்தில் மைதானத்தை மாற்றிய பிசிசிஐ.. என்ன காரணம்?
Narendra Modi Stadium set to host IPL 2025 Final
நடப்பு ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22, 2025 அன்று தொடங்கியது. எவ்வித பிரச்சினைகளும் இன்றி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வழக்கம்போல ஐபிஎல் போட்டிகள் களைக்கட்டியது. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தினால் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில், இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஒருக்கட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்ததன் காரணமாக மே-9 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டு வீரர்கள் பலர் தங்கள் தாயகம் திரும்பினர். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது. ஒரு வார காலத்திற்கு பின் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இன்னும் 9 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ஏற்கெனவே புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் குஜராத்,பெங்களூரு, பஞ்சாப் அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் டெல்லி இடையே மோதல் நிலவுகிறது. இந்நிலையில் வானிலை மற்றும் பிற காரணிகள் அடிப்படையில் ப்ளே-ஆப் சுற்று நடைப்பெறும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது. இதுத்தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் விவரம் பின்வருமாறு-

மாற்றப்பட்ட இடங்கள் மற்றும் தேதிகள்:

---> ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
---> குவாலிஃபையர் 2: ஜூன் 1 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
---> குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர்: மே 29 மற்றும் மே 30 ஆம் தேதிகள் முறையே சண்டிகரிலுள்ள முல்லன்பூரில் நடைபெறும்.

மாற்றத்திற்கான காரணங்கள்:

முன்னதாக பழைய போட்டி அட்டவணையின் படி கொல்கத்தாவில் இறுதிப் போட்டியும், குவாலிஃபையர் 2 போட்டியும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அதே போல், ஹைதராபாத்தில் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

வானிலை நிலைமைகள் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ போட்டி நடைப்பெறும் இடத்தை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைப்போல், பெங்களூரு மற்றும் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி பெங்களூரிலிருந்து லக்னோ மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பெங்களூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.