லைஃப்ஸ்டைல்

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி ?

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்து டாக்டர் பாலு மகேந்திரா விளக்கமளித்துள்ளார்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி ?
Ways to detect breast cancer at an early stage
பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் புற்றுநோயில் மார்பக புற்றுநோய் முதன்மையானதாக உள்ளது. தமிழ்நாட்டில் மார்பகப் புற்றுநோய் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிராமப்புறத்தில் உள்ள பெண்களை விட நகரத்தில் உள்ள பெண்களுக்கே மார்பக புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு வாழ்நாளில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு அடையாதவர்கள், 35 வயதுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பெற்றெடுப்பவர்கள், மாதவிடாய்க்கு பிறகு உடல் எடை அதிகரிப்பவர்கள் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு சற்று அதிகம்.

மதுரை அப்போலா சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள டாக்டர். K.பாலு மகேந்திரா மார்பகப் புற்றுநோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் முறை குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு-

மார்பக சுய பரிசோதனை (Breast Self-Examination-BSE)

30 வயதிலிருந்து ஒவ்வொரு பெண்ணும் மார்பக சுயப்பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். இது ஒரு பெண் வீட்டிலேயே செய்யும் ஒரு சுலபமான பரிசோதனை. இந்த பரிசோதனை செய்ய சிறந்த நேரம் உங்கள் மாதவிடாய் காலத்தின் கடைசி நாள். அதே சமயம் உங்களுக்கு மாதவிடாய் நின்றுவிட்டால், ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் பரிசோதனை செய்யுங்கள். இந்த பரிசோதனையை மாதத்துக்கு ஒரு முறை தவறாமல் செய்ய வேண்டும்.

முதலில் கண்ணாடி முன் நின்றுகொண்டு, உள்ளங்கையை மார்பில் மெதுவாக அழுத்திப் பார்க்க வேண்டும். ஏதாவது கட்டி இருப்பதாக உணர்ந்தாலோ, மார்பகக் காம்புகளில் மாற்றம் தென்பட்டாலோ, மார்பகத்தின் அமைப்பு, தோலின் தன்மையில் ஏதேனும் மாற்றம் இருந்தாலோ கண்டிப்பாக மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். உங்கள் கைகளை கீழே தொங்கவிட்டபடியும், இடுப்பில் வைத்தபடியும் கண்ணாடியில் உங்கள் மார்பகங்களைச் சரிபாருங்கள்.

மேமோகிராம் (Mammogram):

40 வயதிலிருந்து ஆண்டுதோறும் செய்யப்படும் மேமோகிராம், கையால் உணர முடியாத கட்டிகளைக் கூட கண்டறியும். இதன் மூலம் மார்பக புற்றுநோயை மிகவும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.