இந்தியா

ரயிலில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சகோதரர்கள் கைது!

ரயிலில் இருக்கை கிடைக்காத ஆத்திரத்தில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு சகோதரர்களை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

ரயிலில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சகோதரர்கள் கைது!
Brothers arrested for making bomb threat
ரயிலில் இருக்கை கிடைக்காத ஆத்திரத்தில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு சகோதரர்களை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

இருக்கை கிடைக்காததால் ஆத்திரம்

லூதியானாவில் மெக்கானிக்காகப் பணிபுரியும் தீபக் சவுகான் மற்றும் நொய்டாவில் உள்ள தொழிற்சாலை ஊழியரான அவரது சகோதரர் அங்கித் ஆகிய இருவரும் கடந்த 16 ஆம் தேதி இரவு டெல்லியில், அமிர்தசரஸ் - கதிஹார் செல்லும் அம்ரபாலி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் ஏறினர். அவர்களுக்கு இருக்கை கிடைக்காததால், ரயில் இடாவா பகுதிக்கு வந்தபோது சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் காட்டம்பூரைச் சேர்ந்த இந்தச் சகோதரர்கள், இருக்கை காலியாகும் நோக்கில், சிலர் ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்று கருதி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகப் புகார் அளிக்கத் திட்டமிட்டனர்.

தீவிர சோதனை மற்றும் கைது நடவடிக்கை

வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததும், வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்புப் படை உள்ளிட்ட பல குழுக்கள் கான்பூர் மத்திய ரயில் நிலையத்திற்கு விரைந்தன. ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, 40 நிமிடங்கள் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் எந்தச் சந்தேகத்திற்கிடமான பொருளும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், போலீசாரின் வருகையைக் கண்ட தீபக்கும் அங்கித்தும் தங்கள் தொலைபேசிகளை அணைத்துவிட்டு, ரயிலில் ஏறாமல் கான்பூரில் உள்ள ஃபைத்புல்கஞ்சில் ஒளிந்து கொண்டனர். மறுநாள் (அக்.17) காலை அவர்கள் தங்கள் போனை ஆன் செய்தவுடன், போலீசார் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.

இதுகுறித்து உதவிக் காவல் ஆணையர் ஆகாங்க்ஷா பாண்டே கூறுகையில், "இவர்கள் இருவருக்கும் எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்றாலும், இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் (ஏடிஎஸ்) அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்று தெரிவித்தார். இருக்கைக்காகப் பொய் மிரட்டல் விடுத்த இந்தச் சம்பவம், ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.