இந்தியா

'சினிமாவுக்கு திரும்ப விரும்புகிறேன்.. வருமானம் குறைந்துவிட்டது'- சுரேஷ் கோபி பரபரப்பு பேச்சு!

தான் அமைச்சர் பதவியை விரும்பவில்லை என்றும் சினிமா வாழ்க்கையைத் தொடர விரும்புவதாக சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

'சினிமாவுக்கு திரும்ப விரும்புகிறேன்.. வருமானம் குறைந்துவிட்டது'- சுரேஷ் கோபி பரபரப்பு பேச்சு!
Suresh Gopi's sensational speech
தான் மீண்டும் நடிப்புத் துறைக்குத் திரும்பி, தனது சினிமா வாழ்க்கையைத் தொடர விரும்புவதாக மத்திய இணை அமைச்சரும், நடிகர் - அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து தனது வருமானம் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்ணூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய திருச்சூர் தொகுதி எம்.பி.யான சுரேஷ் கோபி, "நான் மீண்டும் நடிக்க விரும்புகிறேன். நான் இன்னும் சம்பாதிக்க வேண்டும். அமைச்சரான பிறகு எனது வருமானம் முற்றிலும் நின்றுவிட்டது," என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

அமைச்சர் பதவி குறித்து சுரேஷ் கோபியின் கருத்து

"நான் ஒருபோதும் அமைச்சர் ஆவதற்காக வேண்டிக்கொண்டது இல்லை. தேர்தலுக்கு முந்தைய நாள், நான் நிருபர்களிடம், 'எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், நான் எனது சினிமா வாழ்க்கையைத் தொடர விரும்புகிறேன்' என்று தெளிவாகக் கூறினேன்.

நான் 2008-ஆம் ஆண்டு அக்டோபரில் கட்சியில் இணைந்தேன். மக்களவைத் தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்த முதல் எம்.பி. நான்தான். அதனால் கட்சி என்னை அமைச்சராக்க வேண்டும் என்று கருதியது. நான் பேசும் வார்த்தைகளை பலர் திரித்துக் கூறுகின்றனர்" என்று வேதனை தெரிவித்தார்.

மேலும், தான் கட்சியில் உள்ளவர்களிலேயே இளைய உறுப்பினர் என்றும், தனக்குப் பதிலாக மாநிலங்களவை எம்.பி. சி. சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக நியமிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, பாஜக மூத்த தலைவரான சதானந்தன் மாஸ்டரை குடியரசுத் தலைவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார்.

அரசியல் பயணம்

சுரேஷ் கோபி கடந்த 2016ஆம் ஆண்டு கலைத் துறைக்கான பங்களிப்புக்காக மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அவர், 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் வி.எஸ். சுனில் குமாரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.