இந்தியா

மனதை நொறுக்கும் சம்பவம்.. மூதாட்டியை சாலையில் விட்டு சென்ற குடும்பத்தினர்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதான மூதாட்டியை அவரது குடும்பத்தினர் சாலையோரம் கிடத்திவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனதை நொறுக்கும் சம்பவம்.. மூதாட்டியை சாலையில் விட்டு சென்ற குடும்பத்தினர்!
Family leaves old woman on the road
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒரு வயதான மூதாட்டியை அவரது குடும்பத்தினர் இரவில் சாலையோரம் கிடத்திவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையோரம் கைவிடப்பட்ட மூதாட்டி

அயோத்தி கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிஷன்பூர் கிராமத்தில் நேற்று இரவு ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின்படி, இரண்டு பெண்களும், ஒரு ஆணும் மூதாட்டியுடன் ஒரு இ-ரிக்‌ஷாவில் வந்துள்ளனர். அவர்கள் மூவரும் சேர்ந்து மூதாட்டியை இ-ரிக்‌ஷாவில் இருந்து இறக்கி சாலையோரம் கிடத்திவிட்டு, அவசரமாக அங்கிருந்து சென்றுள்ளனர். மூதாட்டியை கைவிட்டுச் செல்லும்போது, அவர்கள் ஒரு போர்வையை அவர் மீது போர்த்தியதும், ஒரு பெண் ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றதும் பதிவாகியுள்ளது.

மூதாட்டி மரணம்

காலை 10 மணியளவில், மூதாட்டி சாலையோரம் உயிருக்குப் போராடிய நிலையில் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தர்ஷன் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து வந்து மூதாட்டியை மிகவும் ஆபத்தான நிலையில் தர்ஷன் நகர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். மூதாட்டி ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், கழுத்தில் தொற்று காரணமாக ஆழமான காயம் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மூதாட்டி நேற்று மாலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் தீவிர விசாரணை

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், இருள் மற்றும் தூரம் காரணமாக மூதாட்டியை கைவிட்டவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அயோத்தி கோட்வாலி ஆய்வாளர் மனோஜ் குமார் கூறுகையில், “சிசிடிவி காட்சிகளில் உள்ள நபர்களை அடையாளம் காண ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உயிரிழந்த மூதாட்டியை அடையாளம் காணவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.