இந்தியா

மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனை: ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனையினை பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனை: ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!
Principal Among 8 Booked After Girls Stripped For Menstruation Test
அறநெறிகளை போதிக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில், விரும்பத்தகாத செயல்கள் நடைப்பெறுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவிகளை ஆடைகளைக் களையச் சொல்லி மாதவிடாய் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கழிப்பறையில் இரத்தக் கறைகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, மாணவிகள் இவ்வாறு சோதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகம் மாணவிகளை ஒரு கூடத்திற்கு வரவழைத்து, கழிப்பறையில் இருந்த இரத்தக் கறைகளின் புகைப்படங்களைக் காட்டியுள்ளது. இந்த செயலுக்கு யார் காரணம் என ஆசிரியர் கேட்க, மாணவிகள் யாரும் பதில் கூறாமல் இருந்துள்ளனர்.

பின்னர், மாதவிடாய் பருவத்தினை எட்டிய மாணவிகள் மற்றும் எட்டாதவர்கள் என மாணவிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதில் மாதவிடாய் பருவம் தற்போது இல்லை என்று கூறிய மாணவிகளை, ஒரு பெண் ஊழியர் ஒவ்வொருவராகக் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து அந்தரங்க உறுப்புகளை தனிப்பட்ட முறையில் பரிசோதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தி பரவியதும், பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பெற்றோர்கள் புதன்கிழமை பள்ளி வளாகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல் துறையிலும் புகார் அளித்தனர். இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பேசப்பொருளாகியது.

இதைத் தொடர்ந்து, புதன்கிழமை இரவு 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகளின் ஆடைகளை களைந்து, அவர்களின் அந்தரங்க உறுப்புகளை மாதவிடாய் இருக்கிறதா? என்று சோதித்ததாகக் கூறப்படும் தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் ஒரு பெண் உதவியாளரை போலீசார் கைது செய்ததாக ஷாஹாபூர் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பள்ளியின் முதல்வர், 4 ஆசிரியர்கள், கடைநிலை ஊழியர் மற்றும் இரண்டு அறங்காவலர்கள் உட்பட 8 பேர் மீது பாரதிய நியாய சம்ஹிதா (BNS) மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டம் (POCSO) ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகள் சோதிக்கப்பட்ட விவகாரம், மாநிலம் முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மாணவிகள் பயிலும் அனைத்து பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இருப்பது அவசியம் என்றும், அதற்கான நடவடிக்கைகளை அரசும், பள்ளி நிர்வாகமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.