அரசியல்

திராவிடத்துக்கு எதிராக பேசும் பாஜக.. மௌனம் காக்கும் அதிமுக- அமைச்சர் சிவசங்கர்

அதிமுக, பாஜகவுக்கான மேடையை அமைத்துக் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திராவிடத்துக்கு எதிராக பேசும் பாஜக.. மௌனம் காக்கும் அதிமுக- அமைச்சர் சிவசங்கர்
Siva shankar
‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் முன்னெடுப்பு குறித்து போக்குவரத்து துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு ஒவ்வொரு முறையும் பல்வேறு சதி பின்னல்களை சந்தித்து வருகிறது.

அவற்றையெல்லாம் ஓரணியில் நின்று எதிர்கொண்ட காரணத்தினால் தான் வெற்றி பெற்று வருகின்றோம். இப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிரான சதிப் பின்னல்கள், வியூகங்களை வீழ்த்த தமிழகம் ஓரணியில் திரள வேண்டும் என்பதால் தான் இந்த பரப்புரையை முன்னெடுக்கிறோம்.

அதிமுக, பாஜகவுக்கான மேடையை அமைத்துக் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். அதனால் தான் பாஜகவினர் திராவிட இயக்க கொள்கைக்கு எதிராக பேசும்போது, வாய் மூடி மௌனிகளாக அவர்களோடு அமர்ந்திருக்கும் காட்சியை நாம் பார்க்கிறோம்.

சமீபத்தில் முருகன் மாநாட்டில் அண்ணா, பெரியார் கேலிச்சித்திர காணொளியை 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மௌனியாக அமர்ந்திருந்து தடுமாறிய காட்சிகளை பார்த்தோம். அதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்க முடியாத நிலையில் அதிமுக உள்ளது.

ஒருபுறம் கூட்டணி என்னும் பெயரில் அதிமுக அமைத்துக் கொடுக்கின்ற மேடை, மற்றொருபுறம் திமுகவுக்கு வருகின்ற வாக்குகளை பிரித்து, பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர சில கட்சிகள் துடிக்கின்றன” எனத் தெரிவித்தார்.

மேலும் கீழடி குறித்து பேசிய அவர், “கீழடி நாகரீகம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை பல்வேறு அறிவியல் பூர்வ ஆய்வுகளின் மூலம் நாம் நிரூபித்துள்ளோம். அதை ஏற்க ஒன்றிய பாஜகவுக்கு மனமில்லை. மொழியை காக்க மண்ணைக் காக்க தமிழ் மானத்தைக் காக்க, நாம் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். அந்தப் போராட்டத்தில் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துள்ளார்.

ஓரணியில் தமிழ்நாடு எனும் பரப்புரை மூலமாக திமுக உறுப்பினராக சேர்ப்பது மட்டுமல்ல. அனைத்து வீட்டில் உள்ள மக்களையும் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சரின் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை ஆகஸ்ட் மாதம் வரை மேற்கொள்ள உள்ளோம்” எனக் கூறினார்.