அரசியல்

காவலாளி அஜித்குமார் மரணம்: உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்- ஈ.ஆர். ஈஸ்வரன்

“காவலாளி அஜித்குமார் வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று ஈ.ஆர். ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

காவலாளி அஜித்குமார் மரணம்: உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்- ஈ.ஆர். ஈஸ்வரன்
E.R.Eswaran
கோவை மாவட்டம், இருகூர் எல்என்டி பைபாஸ் சாலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட தனியார் பல்நோக்கு மருத்துவமனையின் திறப்பு விழாவில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈ.ஆர். ஈஸ்வரன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சுவாமி, கோவை எம்பி கணபதி ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஈ.ஆர். ஈஸ்வரன், “நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைத்தால், விஜய்யின் வாக்குகள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், திருப்புவனம் காவலாளி அஜித்குமார் மரணம், காவல்துறையின் மனிதாபிமானமற்ற செயல். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு சில காவலர்களின் தவறுகளால் மொத்த காவல்துறை, அரசு, முதலமைச்சருக்கு களங்கம் ஏற்படுகிறது.

அதேபோல், திருப்பூர் புதுமணப்பெண் மரண விவகாரம் ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டுமல்ல, சமூகப் பிரச்சினை. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “வரும் 2026-ல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று வெற்றி பெறும். நான்கு சுவர்களுக்குள் பேசித் தொகுதிகள் கேட்பது எங்களுக்கு அவசியமில்லை.

நாங்கள் கொங்கு மண்டலத்தை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். 2026 தேர்தலில் வெற்றிக்கு இது அவசியம்” என்று அவர் கூறினார்.