அரசியல்

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!
TVK Candidate
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அக்கட்சியின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட புகார்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக 'குட்டி' என்கிற பிரகாசம் கடந்த 29 ஆம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீது அதே கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகி ஒருவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், பாலியல் தொல்லை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் திருவள்ளூர் காவல்துறையினர் பிரகாசம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

புகார்தாரரின் குற்றச்சாட்டு

செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண், வேட்பாளர் பிரகாசம் தன்னிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், இது குறித்து கட்சித் தலைமையிடம் ஆறு மாதங்களுக்கு முன்பே புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கூலிப்படை மூலம் குடும்பத்தையே கொன்று விடுவதாகப் பிரகாசம் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர் தரப்பு விளக்கம்

இதற்கிடையே, இந்தப் புகாரை வேட்பாளர் பிரகாசத்தின் மனைவி மறுத்துள்ளார். கட்சியில் பதவி கிடைக்காத விரக்தியில் தனது கணவர் மீது திட்டமிட்டுப் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அவர் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்துள்ளார். உட்கட்சி பூசல் காரணமாக இந்தப் புகார் அளிக்கப்பட்டதா அல்லது இதில் உண்மை உள்ளதா என்பது குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.