அரசியல்

ரூ. 82 லட்சம் வரி நிலுவை: ஜெயலலிதா வீட்டிற்கு சீல்!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீட்டை, சொத்து வரி நிலுவை காரணமாகப் ஹைதராபாத் மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

ரூ. 82 லட்சம் வரி நிலுவை: ஜெயலலிதா வீட்டிற்கு சீல்!
Jayalalitha
ஹைதராபாத்தில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீட்டை, சொத்து வரி நிலுவை காரணமாகப் ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) அதிகாரிகள் சீல் வைத்தனர். இது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரி நிலுவை

ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஜெயலலிதாவிற்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடம் (G+4), நீண்ட நாட்களாகச் சொத்து வரி செலுத்தப்படாததால் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு முதல் இதற்கான வரி நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

இந்தக் கட்டிடத்திற்கு 2017 முதல் வரி செலுத்தாததால், கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி துணை ஆணையர் சுரேஷ், ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், அதற்கு எவ்வித பதிலும் வராத நிலையில், நேற்று அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்குச் சென்று சீல் வைத்தனர்.

வரி விவரங்கள்

மாநகராட்சியின் ஒருமுறை தீர்வு திட்டத்தின் (OTS) கீழ் மார்ச் 31-ஆம் தேதி வரை சலுகை வழங்கப்பட்ட பின்னரும், சுமார் ரூ. 82,91,822 வரி நிலுவையில் உள்ளது. இந்தக் கட்டிடம் முன்பு வணிக ரீதியாகப் பயன்படுத்தப்பட்டதால் அதிக வரி விதிக்கப்பட்டது. ஆனால், 2017 முதல் இது குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டதால், வரியைக் குறைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயகுமார் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.