அரசியல்

கல்விக்கு உபரி நிதி தான் பயன்படுத்தப்படுகிறது.. அமைச்சர் சேகர்பாபு

கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

கல்விக்கு உபரி நிதி தான் பயன்படுத்தப்படுகிறது.. அமைச்சர் சேகர்பாபு
Minister Sekar Babu
இந்து சமய அறநிலையத்துறையின் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் மயிலாப்பூர், கபாலீசுவரர் திருக்கோயில் உள்ளிட்ட 5 திருக்கோயில்களில் பௌர்ணமி விளக்கு பூஜையை அமைச்சர் சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “பௌர்ணமி திருநாளில் ஒட்டுமொத்தமாக 25 கோவில்களில் விளக்கு பூஜை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களிலும் 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் இந்த விளக்கு பூஜை தொடர்ந்து நடைபெறும். இதுவரை இந்த திருவிளக்கு பூஜைகளில் 65 ஆயிரத்து 350 சுமங்கலி பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் உத்தரவின் பேரில் இந்த திருவிளக்கு பூஜை கட்டணம் 200 ரூபாயில் இருந்து இன்று முதல் 100 ரூபாய் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த ஆட்சி ஏற்பட்ட பின் 3297 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. வரும் 11 ஆம் தேதி 28 திருக்கோவில்களில் குடமுழுக்கும் 29 ஆம் தேதி முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கோயிகளில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கும் நடத்தப்படும் கோவில்களின் எண்ணிக்கை 3,5000-ஐ தாண்டும்” என்றார்.

கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என்ற தமிழிசை கேள்விக்கு பதில் அளித்த அவர், “வசதிக்கு ஏற்பது போல் பேசக்கூடாது. குமரி முனையில் கல்லூரிகள் இல்லை என்பதால், பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி பராசக்தி கல்லூரி பெண்களுக்கென தொடங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி கல்லூரிகளில் 22500 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் தொடங்கி, காமராஜர், எம் ஜி ஆர், ஜெயலலிதா, தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி வரை உபரி நிதியில் கட்டிடங்களை கட்டி இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சியினர் சேர்ந்திருக்கும் இடம் அப்படிப்பட்ட இடம். பாஜக இவர்களை அரவணைக்க வேண்டும் என்பதற்காக மனசாட்சியை விட்டு இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்” என்று கூறினார்.