அரசியல்

விபத்தில் சிக்கிய தம்பதி.. ஓடிச் சென்று நலம் விசாரித்த விஜய்!

திருச்சியில் தான் பயணித்த வேனை பின்தொடர்ந்து வந்து விபத்தில் சிக்கிய தம்பதியை விஜய் நேரில் நலம் விசாரித்தார்.

விபத்தில் சிக்கிய தம்பதி.. ஓடிச் சென்று நலம் விசாரித்த விஜய்!
TVK Vijay
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் திருச்சி வருகை தந்துள்ளார்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய், திறந்த வேனில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தபடி வேட்புமனு தாக்கல் செய்யப் புறப்பட்டார். திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் அவர், இன்று அங்குள்ள மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட உள்ளார். பாதுகாப்பு மற்றும் நெரிசல் காரணங்களால், திருச்சியில் ஒரு இடத்தில் மட்டுமே பிரசாரம் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய தம்பதி: ஓடிச் சென்று நலம் விசாரித்த விஜய்

விஜய்யின் வேனைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினர். இதைக் கவனித்த விஜய், உடனடியாக தனது வேனை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கிச் சென்று, அந்தத் தம்பதியினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் செயல் அங்கிருந்த தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடரும் பைக் பேரணி: தலைமை எச்சரிக்கை

விஜய்யைப் பின்தொடர்ந்து யாரும் இருசக்கர வாகனங்களில் வரக் கூடாது என்று கட்சித் தலைமை ஏற்கனவே கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும், தலைவரை நேரில் காணும் ஆர்வத்தில் இன்றும் ஏராளமான தவெக தொண்டர்கள் விதிகளையும் எச்சரிக்கையையும் மீறி வேனைப் பின்தொடர்ந்து வந்தனர். மேலும் சிலர் எதிர் திசை சாலையில் விஜய்யை பின்தொடர்ந்து வந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.