அரசியல்

"என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.." பாஜக மாநிலத் துணைத் தலைவர் மீது பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!

பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்துள்ளார்.


Karu Nagarajan
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் மீது அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வரும் கரு நாகராஜன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக அவர் புகார் அளித்துள்ளார். தனக்கு நேர்ந்த இன்னல்கள் குறித்து அந்தப் புகாரில் அவர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். தன்னிடம் தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்ட கரு நாகராஜன், தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாக அந்தப் பெண் புகார் தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் கூட்டம் என்று கூறித் தன்னை காரில் அழைத்துச் சென்று, வழியில் தவறாக நடந்துகொண்டதாகவும் அவர் தனது புகாரில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே கட்சியின் தலைமைக்குத் தான் புகார் அளித்ததாகவும், ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.