தமிழ்நாடு

மோசடி வழக்கில் நடிகை கௌதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்!

நம்பிக்கை மோசடி வழக்கு தொடர்பாக, பிரபல நடிகை கௌதமி இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மோசடி வழக்கில் நடிகை கௌதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்!
மோசடி வழக்கில் நடிகை கௌதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்!
தன் மீது நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் இறந்துவிட்டதால், அவரை வழக்கிலிருந்து நீக்குவது குறித்து நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

திரைப்பட நடிகை கௌதமிக்கும் அவரது அண்ணன் ஸ்ரீகாந்த்திற்கும் சொந்தமான நிலம் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக, கௌதமி 2015-ம் ஆண்டு, தான் நம்பகமான மேலாளர் எனக் கருதிய சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த அழகப்பன் (64) என்பவரிடம் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.

நம்பிக்கை மோசடி

ஆனால், அழகப்பன் தனது நண்பர்களான ரகுநாதன், சுகுமாரன் மற்றும் பலராமன் ஆகியோருடன் சேர்ந்து நிலத்தை அபகரித்துக் கொண்டு, அதற்குரிய பணத்தைக் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கௌதமி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அழகப்பன் கடந்த ஆண்டுக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்

இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1-ல் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுகுமாரன் அண்மையில் உயிரிழந்துவிட்டார். எனவே, அவரைக் குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்குவது குறித்து ஆட்சேபனை உள்ளதா என நீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்காக நடிகை கௌதமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

சம்மனை ஏற்றுக்கொண்ட கௌதமி, இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகித் தனது விளக்கத்தை அளித்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீதிமன்றத்தில் காத்திருந்த அவர், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.