தமிழ்நாடு

"மத்திய அரசுக்கு காந்தியும் பிடிக்காது, மக்கள் நலனும் பிடிக்காது"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"மத்திய அரசுக்கு மகாத்மா காந்தியும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


CM Stalin
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து காரைக்குடி கழனிவாசலில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.2.559.50 கோடி மதிப்புள்ள 49 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.13.36 கோடி மதிப்புள்ள 28 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

"சிவகங்கை.. வீரத்தால், தியாகத்தால் சிவந்த மண்"

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "சிவகங்கை என்றாலே சிலிர்ப்பு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரீகம் ஓங்கி இருந்ததற்கான கீழடி தடயம் கிடைத்த மண் இந்த மண். பலரின் வீரத்தால், தியாகத்தால் சிவந்த மண். ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற வேலுநாச்சியார் வாழ்ந்த மண்" என்று தெரிவித்தார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

மேலும் அவர், "தமிழ்நாடு வளர்ந்துள்ளது என்று மத்திய அரசு புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக பாராட்டி உள்ளது. ஆனால் தேர்தலுக்காக பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் பிரதமர் மோடி பேசுகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், கவர்னரும் படிக்க வேண்டும்" என்றார்.

"மகாத்மா காந்தியும் பிடிக்காது..."

தொடர்ந்து பேசிய அவர், "மத்திய அரசுக்கு மகாத்மா காந்தியும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது. கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை காலி செய்துவிட்டு, வேறு பெயரில் புது திட்டம் கொண்டு வந்து இருக்காங்க
விக்சித் பாரத் திட்டம் திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். திமுக அரசின் திட்டங்களை காப்பியடித்து புதிய வாக்குறுதிகள் என அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி. மீண்டும் திமுக ஆட்சிதான். மக்கள் மகிழ்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே என் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.