தமிழ்நாடு

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் -  ஆர்.பி.உதயகுமார் பதிலடி
அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கம், புரட்சித்தலைவி அம்மாவால் மூன்றாம் பெரிய மக்கள் இயக்கமாக வளர்ந்தது. அம்மாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடியார் இந்த இயக்கத்தை புத்துணர்ச்சியுடன் வழிநடத்தி வருகிறார். 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற லட்சியத்துடன் அவர் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வரும் எழுச்சிப் பயணம், வெற்றியை நோக்கிச் செல்கிறது. கடந்த 47 நாட்களில் 27 மாவட்டங்களில் 140 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 80 லட்சம் மக்களைச் சந்தித்து 8,000 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். இந்த மக்களின் பேரலை ஆதரவே, எடப்பாடியாரின் வெற்றிக்கு சாட்சி," என்று உதயகுமார் பெருமிதம் தெரிவித்தார்.

வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு தோல்விதான்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக, அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தப் பகல் கனவு காண்கிறது. அதேபோல, எடப்பாடியாரின் செல்வாக்கை மடைமாற்றம் செய்யும் வகையில், சிலர் அவரை மாற்றுவோம், இவரை மாற்றுவோம் என்று மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். ஒற்றுமை என்ற பெயரில் அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைக்கும் இந்த வயிற்றெரிச்சல் மனிதர்களுக்குப் புரட்சித் தலைவரின் ஆன்மாவும், அம்மாவின் ஆன்மாவும் தோல்வியைத் தான் பரிசாகத் தரும் என்று அவர் சாடினார்.

மேலும், எடப்பாடியார் வீட்டைச் சந்தித்து விருந்து சாப்பிட்டுவிட்டு, மீண்டும் எடப்பாடியார் தலைமையில் தான் அதிமுக-பாஜக கூட்டணி வலுப்பெறும் என்று பறைசாற்றிவிட்டுச் சென்றவர்களைப் பற்றியும் உதயகுமார் குறிப்பிட்டார்.

எடப்பாடியார் ஒருவர் தான் முதலமைச்சர்

அதிமுக ஒரு ஜனநாயகம் நிறைந்த, தொண்டர்கள் இயக்கம். இதை ராணுவக் கட்டுப்பாடுடன் வழிநடத்தி வரும் எடப்பாடியாரை அசைத்துவிட முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம். அதை மக்கள் சக்தி நிரூபிக்கும். 'அவரை மாற்றுவோம், இவரை மாற்றுவோம்' என்று பேசிக்கொண்டிருப்பவர்களை எல்லாம் மாற்றிவிட்டு, எடப்பாடியார் ஒருவர் தான் முதலமைச்சர் என்று மக்கள் தீர்ப்பெழுதுவார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.