தமிழ்நாடு

வாரத் தொடக்கத்தில் குட் நியூஸ்: தங்கம் விலை திடீர் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 சரிந்துள்ளது.

வாரத் தொடக்கத்தில் குட் நியூஸ்: தங்கம் விலை திடீர் சரிவு!
Gold Rate
சர்வதேசச் சந்தையில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த வாரம் அதிரடியாக உயர்ந்தது. குறிப்பாக, கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 வரை உயர்ந்து பொதுமக்களுக்குப் அதிர்ச்சி கொடுத்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமையும் விலை உயர்வு தொடர்ந்த நிலையில், இன்று திங்கட்கிழமை காலையில் விலை சற்று குறைந்துள்ளது.

கடந்த வார விலை நிலவரம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்ததால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்தினர். இதன் விளைவாக, கடந்த சனிக்கிழமை மாலை ஒரு சவரன் தங்கம் ரூ.1,24,400 என்ற நிலையை எட்டியது. நேற்று (ஞாயிறு) மேலும் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,26,200-க்கும், ஒரு கிராம் ரூ.15,775-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.3,25,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை நிலவரம்

தொடர் ஏற்றத்தைச் சந்தித்து வந்த தங்கம் விலை, இன்று வாரத்தின் முதல் நாளில் சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.920 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,25,280-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை சரிவு

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.315-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.10,000 அதிரடியாகக் குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,15,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.