தமிழ்நாடு

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்.. விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆவேசம்!

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று பேசிய நபர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்.. விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆவேசம்!
தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்.. விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆவேசம்!
தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் எனச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விலங்குகள் நல ஆர்வலர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பின் போது, விலங்குகள் நல ஆர்வலர்கள் செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் தெரு நாய்கள் குறித்த சர்ச்சை தொடர்ந்து அனல்பறந்து வருகிறது. தெரு நாய்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக ஒரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை மாறி மாறிப் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், 'முரளிதரன்' என்ற நபர், தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்றும், அவற்றுக்கு உணவு அளிக்கக் கூடாது என்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

இது, விலங்கு வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டுவதாகவும் கூறி, விலங்குகள் நல ஆர்வலர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், முரளிதரன் என்பவர் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசி வருகிறார். தமிழகத்தில் தெரு நாய்களே இருக்கக் கூடாது என்ற நோக்கில் அவர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. காவல்துறை உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, செய்தியாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த விலங்குகள் நல ஆர்வலர்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் எங்களால் பதிலளிக்க முடியாது என்று ஒருவர் கூறிவிட்டுச் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது.