தமிழ்நாடு

பாமக நிர்வாகிமீது கொலை முயற்சி: டிஜிபி அலுவலகத்தில் எம்எல்ஏ அருள் புகார்!

பாமக நிர்வாகி ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாமக நிர்வாகிமீது கொலை முயற்சி: டிஜிபி அலுவலகத்தில் எம்எல்ஏ அருள் புகார்!
பாமக நிர்வாகிமீது கொலை முயற்சி: டிஜிபி அலுவலகத்தில் எம்எல்ஏ அருள் புகார்!
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளருமான ம. க. ஸ்டாலின் மீது, நேற்று நாட்டு வெடிகுண்டுவீசிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, பாமக எம்எல்ஏ அருள், காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

நேற்று முன்தினம், ம. க. ஸ்டாலின் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது, முகமூடி அணிந்து வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல்அவரைக் கொல்லும் திட்டத்துடன் வெடிகுண்டுகளை வீசி, கத்தியால் வெட்ட முயன்றது. அப்போது, தடுக்க வந்த இளையராஜா மற்றும் அருண் ஆகிய இருவரும் கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டனர்.

வெடிகுண்டு வீசியதாலும், வெட்டுக்காயங்களாலும் படுகாயமடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டப்பகலில், அதுவும் ஒரு அரசு அலுவலகத்திற்குள்ளேயே நடத்தப்பட்ட இந்தத் துணிச்சலான தாக்குதல் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச்சம்பவம்குறித்து, பாமக மாநில இணைப் பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான அருள், காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் விரிவான புகார் ஒன்றை அளித்தார். அதில், “தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் விதமாக, எவ்வித அச்சமுமின்றி ஒரு கூலிப்படை கும்பல் இந்தக் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.

காவல்துறை டிஜிபி நேரடியாகத் தலையிட்டு, இந்தத் தாக்குதலுக்குப் பின்புலமாக இருந்து சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் பொருளாதார உதவிகள் செய்தவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை பாமக வேட்பாளராகப் போட்டியிட்ட காரணத்தால், ம.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. அந்தப் பாதுகாப்பு தொடர்ந்திருந்தால் இப்படியொரு துணிச்சலான சம்பவத்தைக் கூலிப்படை கும்பல் நடத்தியிருக்க மாட்டார்கள் எனச் சுட்டிக்காட்டிய எம்எல்ஏ அருள், ம.க. ஸ்டாலினுக்கு உடனடியாகத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.