தமிழ்நாடு

சென்னை மக்கள் கவனத்திற்கு.. வீட்டில் நாய் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம்!

தடை செய்யப்பட்ட நாய் வகைகளை வீட்டில் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் கவனத்திற்கு.. வீட்டில் நாய் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம்!
Keeping a dog at home is a waste of Rs 1 lakh?
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம், மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. கடந்த மாதம் வாக்காளர் திருத்த சிறப்புப் பணிகளுக்காகக் கூட்டம் நடைபெறாத நிலையில், இன்று கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை வசதி

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்காகக் கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகள் ஏற்படுத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகள் உரிமத்திற்கான கெடு மற்றும் அபராதம்

சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான கெடு இன்றுடன் முடிவடைவதாக மாமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு செய்து, உரிமம் பெறாத செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் இதுவரை 98,523 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நாய் வகைகளுக்கு ஒரு லட்சம் அபராதம்

மாநகராட்சி கூட்டத்தில், செல்லப் பிராணிகள் தொடர்பான மற்றொரு கடுமையான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராட்வீலர்ஸ் (Rottweilers), பிட்புல் டெரியர் (Pitbull Terriers) உள்ளிட்ட தடை செய்யப்பட்ட நாய் வகைகளை வீட்டில் வளர்க்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி வளர்க்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.