தமிழ்நாடு

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை.. திமுக கவுன்சிலர் பேரன் உட்பட 4 பேர் மீது வழக்கு!

சென்னையில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், திமுக கவுன்சிலர் பேரன் உள்ளிட்ட 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை.. திமுக கவுன்சிலர் பேரன் உட்பட 4 பேர் மீது வழக்கு!
கார் மோதி மாணவர் கொலை.. அதிர்ச்சி தகவல்
சென்னை அயனாவரம், பி.இ. கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகன், கல்லூரி மாணவர் அபிஷேக் (20), மற்றும் அவரது நண்பர் நித்தின் சாய் இருவரும் நேற்று இரவு திருமங்கலம், பள்ளி சாலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நண்பர்களுடன் சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற அபிஷேக் மற்றும் நித்தின் சாய் மீது, அதே திசையில் பின்னால் வந்த ஒரு சொகுசு கார் வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் நித்தின் சாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அபிஷேக் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை நேரில் பார்த்த நண்பர்கள், விபத்தை ஏற்படுத்திய கார் மீது கற்களை வீசியுள்ளனர். ஆனால், காரை ஓட்டி வந்தவர் நிறுத்தாமல் தப்பிச் சென்றுவிட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், நித்தின் சாய் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அபிஷேக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, காரை ஓட்டி வந்தவரைத் தேடி வந்தனர்.

விபத்தல்ல, கொலை: குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

இந்த நிலையில், உயிரிழந்த நித்தின் சாயின் குடும்பத்தினர் இது விபத்து அல்ல, கொலை என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நித்தின் சாயின் தாயார், முதலில் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், பின்னர் தான் கொலை வழக்காக மாற்றப்பட்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

"தனது மகனை திமுக கவுன்சிலர் கே.கே. நகர் தனசேகரனின் பேரன் சந்துரு என்பவர்தான் கார் ஏற்றி கொலை செய்து விட்டார். சந்துருக்கும் தனது மகனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. என் மகன் மீது காரை ஏற்றிவிட்டு, ஜன்னலைத் திறந்து சந்துரு சிரிச்சு ஆனந்தப்பட்டுள்ளார். பணம், பதவி இருப்பதால் சந்துரு இந்த வழக்கை விபத்து போல மாற்ற முயன்று வருகிறார். என் மகன் சாவிற்கு நீதி வேண்டும்" என்று கண்ணீர் மல்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

காதல் விவகாரத்தில் கொலை? - அதிர்ச்சி தகவல்கள்!

இதையடுத்து, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசிடம் இருந்து இந்த வழக்கு திருமங்கலம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டது ரேஞ்ச் ரோவர் (Range Rover) ரக சொகுசு கார் என்று கூறப்படுகிறது. இந்த காரை ஓட்டியது ஆரோன் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆரோன் ஒரு வழக்கறிஞரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. காருக்குள் சந்துரு, எட்வின், சுதன், பிரணவ் உள்ளிட்டோர் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதில் சுதன், பிரணவ் ஆகிய 2 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரணவ் ஒரு பள்ளி மாணவியை காதலித்து வந்ததாகவும், அந்த மாணவியுடன் கல்லூரி மாணவன் வெங்கடேஷ் என்பவர் பேசிவந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பள்ளி மாணவி பிரணவிடம் தெரிவித்ததாகவும் தெரிகிறது. அதனால் பிரணவ் தனது நண்பரும், திமுக கவுன்சிலர் கே.கே. நகர் தனசேகரனின் பேரனுமான சந்துருவிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று சொகுசு காரில் சந்துரு, பிரணவ், சுதன், ஆரோன் ஆகியோர் அண்ணாநகர் சென்று அங்கு வெங்கடேஷை வரவழைத்து மிரட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் வெங்கடேஷுக்கு ஆதரவாகக் கல்லூரி மாணவர்கள் அபிஷேக், நித்தின் சாயும் வந்துள்ளனர். மிரட்டிய பிறகு, பைக்கில் அபிஷேக்கும் நித்தின் சாயும் செல்லும் போது சொகுசு காரைக் கொண்டு ஏற்றி விட்டு தப்பியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, வெங்கடேஷ் தனது நண்பர்கள் 10 பேருடனும், பிரணவ், சந்துரு உள்ளிட்ட 4 பேரும் முதலில் அண்ணாநகர் காவல்நிலையம் அருகேவும், பின்னர் திருமங்கலம் பள்ளி சாலை என இடத்தை மாற்றி சண்டையிடச் சென்றதாகக் கூறப்படுகிறது. முதலில் வெங்கடேஷ் மீது காரை ஏற்ற பிரணவ் தரப்பு முயன்றனர். அதில் வெங்கடேஷ் லேசான காயங்களோடு தப்பிய நிலையில், கற்களால் காரை விரட்டியதாகவும், அப்பொழுது அந்த நான்கு பேரும் உயிர் இழந்த நித்தின் சாய் சென்ற இருசக்கர வாகனத்தை இடித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சுதன், பிரணவ் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள திமுக கவுன்சிலர் கே.கே. நகர் தனசேகரன் பேரன் சந்துரு உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.