தமிழ்நாடு

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!
இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!
கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நடைபெறுகிறது

1989ஆம் ஆண்டு, பாரதியார் பல்கலைக்கழக பயன்பாட்டிற்காக 960 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் தொடர்ச்சியாக, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் 600 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் சிபிஎம் கட்சியினருடன் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். “நிலத்தைத் தந்தோம், நியாயத்தை மறுக்காதீர்கள்”, “பணத்தை கொடுங்கள், இல்லை என்றால் நிலத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என முழக்கம் எழுப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மாநிலச் செயலாளர் சண்முகம் பேசியதாவது, “விவசாயிகள் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கியது, வளர்ச்சி எண்ணத்தோடு தான். ஆனால், கடந்த 45 ஆண்டுகளாக அவர்கள் இழப்பீட்டுக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. 928 ஏக்கரில் 600 ஏக்கர் நிலம் இன்னும் பயன்பாட்டில் இல்லை. நிதியில்லையென அரசுக்குத் தோன்றின், அந்த நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கு ஒப்படையட்டும்,” என்றார்.

இழப்பீடு கேட்டுப் போராடும் விவசாயிகள், உரிய தீர்வு வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவகம் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.