தமிழ்நாடு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: அனுமதியின்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு நோட்டீஸ்!

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற மகளிர் விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: அனுமதியின்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு நோட்டீஸ்!
Coimbatore District administration issues notice to women's hostels
கோவையில் விடுதியில் தங்கி இருந்த கல்லூரி மாணவி விமான நிலையம் அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற மகளிர் விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனுமதியின்றி இயங்கி வரும் மகளிர் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கையும் பின்னணியும்

கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்குவதால், பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்காகப் பல இடங்களில் மகளிர் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் உள்ளதாகவும், இதில் ஏறத்தாழ 160 விடுதிகள் வரை அனுமதியின்றி இயங்கி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவி விமான நிலையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், மாவட்ட நிர்வாகம் தற்போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஆலோசனை மற்றும் எச்சரிக்கை

இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதமே மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதியின்றி செயல்படும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா, தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, அனுமதி இன்றி செயல்படும் மகளிர் விடுதிகள் விரைந்து ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும் என்றும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அனுமதியின்றி இயங்கிய சுமார் 80க்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் உரிமம் கோரி விண்ணப்பித்தனர்.

தற்போதைய நடவடிக்கை

தற்போது கோவை மாநகர் மட்டுமின்றி ஊரகப் பகுதிகளிலும் அனுமதி இன்றி இயங்கி வரும் மகளிர் விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சமூக நலத்துறை சார்பில் இந்த மகளிர் விடுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.