தமிழ்நாடு

எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து அவதூறு: நடிகர் ரமேஷ் கண்ணா, யூடியூப்பர் மீது அதிமுக புகார்!

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா குறித்து இழிவாக பேசியதாக யூடியூப்பர், நடிகர் ரமேஷ் கண்ணா மீது அதிமுக நிர்வாகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து அவதூறு: நடிகர் ரமேஷ் கண்ணா, யூடியூப்பர் மீது அதிமுக புகார்!
ADMK Complaint
அதிமுக தென் சென்னை தெற்கு (கி) மாவட்டம் இலக்கிய அணி இணை செயலாளர் அம்மா கோபி மற்றும் தென் சென்னை தெற்கு (கி) வட்டக் கழக செயலாளர் சுரேஷ் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அதிமுக நிர்வாகி கோபி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "யூடியூப்பர் முக்தார் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா, முக்தார் இருவரும் சேர்ந்து முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் குறித்து மிகவும் இழிவாக பேசி உள்ளனர். ஆபாசமான மற்றும் அடிப்படை ஆதாரமற்றவைகளை இருவரும் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா ஆகியோரின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் பேசியுள்ளனர். குறிப்பாக உருவ கேலி செய்தும் மிகவும் வக்கிரமான முறையில் அவதூறு பரப்பியும் வீடியோ வெளியிட்டுள்ளனர். இரட்டை அர்த்த வசனங்கள், இழிவுச்சொற்கள், வரலாற்றை திரித்துப் பேசுதல, தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முன்னாள் முதல்வர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளனர். ஆபாசம் மற்றும் ஒழுக்கக்கேடு சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தரக்குறைவான அருவருப்பான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால், பொதுமக்களிடையே கடும் அதிருப்தி மற்றும் மனவேதனை ஏற்பட்டுள்ளது. எனவே யூடியூப்பர் முக்தார், திரைப்பட நடிகர் ரமேஷ் கண்ணா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இருவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அதிமுக நிர்வாகி கோபி தெரிவித்துள்ளார்.