தமிழ்நாடு

ரமலான் பண்டிகை: ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரமலான் பண்டிகை: ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
Ramzan
புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இஸ்லாமியப் பெருமக்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்

"நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் இஸ்லாமாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்.

வரலாற்றில் நாம் கண்ட பெரும் புரட்சியாளர்களில் ஒருவரும், சமத்துவத்தின் திருவிளக்குமான நபிகள் நாயகத்தின் நெறியில் வாழ்ந்து வரும் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு என்றும் அரணாக நமது திமுகவும், திமுக அரசும் திகழ்ந்து வருகின்றது. கல்வி, வேலை வாய்ப்புகள், பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், மதச் சுதந்திரம் என அனைத்து நிலைகளிலும் சிறுபான்மைச் சகோதரர்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறது.

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவரும் போதெல்லாம் மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவற்றை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருவதுடன், சட்டமன்றத் தீர்மானங்கள் வாயிலாகவும் நமது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறோம். மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்று நாம் செயல்படுவதால்தான், அனைத்துத் தரப்பு மக்களும் நம்மைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள்.

இந்தியாவில் பிற மாநிலங்களில் எல்லாம் வெறுப்பு விதைகள் தூவப்பட்டு, நாள்தோறும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையிலும் தமிழ்நாடு நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபோடும் நமது அரசு அனைவரது பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்துள்ளது.

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில், பல சிறப்பு அறிவிப்புகளையும், சென்னையில் ஹஜ் இல்லம், தொன்மையான பள்ளிவாசல்கள் - தர்காக்கள் புனரமைப்பு, இசுலாமிய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட திட்டங்களையும் நிறைவேற்றி வந்திருக்கிறோம். இப்படி என்றும் உங்களில் இருந்து பிரிக்க முடியாத சொந்தமாக உறவாடும் அன்போடு, ஈகைப் பண்போடு ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

"அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.

இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில், உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்

புனித ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

இந்த புனித மாதம் நம் உள்ளங்களை தூய்மைப்படுத்தி, கருணை, பொறுமை, தியாகம் மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த மதிப்புகளை நமக்குள் மேலும் வலுப்படுத்தும் அருமையான காலமாகும்.

அனைவரின் வாழ்விலும் அமைதி நிலைத்து, மகிழ்ச்சி பெருகி, அன்பும் நிம்மதியும் என்றும் தங்கட்டும். சகோதரத்துவமும் நல்லிணக்கமும் மேலும் வளர்ந்து, உங்கள் இல்லங்களில் செழிப்பும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த ரமலான் உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் ஒளியையும் கொண்டு வரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்

"அன்பைப் பகிர்வோம்! சமூக நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போற்றும் நன்னாளாம் இந்த ஈகைப் பெருநாள் புனித ரமலான் திருநாள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் வளத்தையும் கொண்டு வரட்டும்!

என் அன்பு இசுலாமியச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

"மார்க்கத்தின் வழியாக மனிதத்தை வாழ்விக்க மகத்தான நன்னெறியினை மொழிந்த இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள், “இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை; உங்கள் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான்” என்கிறார்.

மேலும், தம்முடைய அருள்மொழியில், “தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது; இப்பூவுலகில் நீங்கள் தரும் ஈகைதான் உண்மையான செல்வம். பூமியில் உள்ள உயிர்களிடம் நீங்கள் கருணை கொண்டால், விண்ணில் உள்ள இறைவன் உங்களிடம் கருணை கொள்வார்” என்றும் கூறுகிறார். “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்றும் தம்முடைய இறுதிப் பேருரையில் குறிப்பிடுகிறார்.

போற்றுதலுக்குரிய நபி பெருமானார் காட்டிய அத்தகைய அன்புவழி நின்று, அறநெறி பற்றி, ஐந்து முதன்மைக் கடமைகளில் ஒன்றாக, புனித ரமலான் மாதத்தில் இறைவனை எண்ணி உணவும், நீரும் துறந்து, உடலையும், உள்ளத்தையும் பண்படுத்தி, 30 நாட்கள் நோற்ற நோன்பு முழுமைபெறும் திருநாளாம், ‘இரம்ஜான் பெருநாளை’ பெருமகிழ்வோடு கொண்டாடும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும், எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவின் பேரருள் நிறையட்டும்; உங்களின் உளப்பூர்வமான நோன்பினையும், வழிபாட்டையும், வணக்கத்தையும் நற்கொடையையும், நற்செயல்களையும் இறைவன் ஏற்றுக்கொள்ளட்டும். இப்புனித நாள் உங்கள் இதயத்தில் அமைதியையும், வாழ்வில் மகிழ்ச்சியையும், குடும்பத்தில் அன்பையும் கொண்டுவரட்டும்.

இல்லாதவருக்கு ஈயும் இன்பத்திருநாளான, ஈகைப்பெருநாளைக் கொண்டாடும் இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்" என்று தெரிவித்துள்ளார்.