தமிழ்நாடு

சென்னை புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது!

கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது!
சென்னை புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது!
சென்னையில் இயங்கும் பல கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் தங்களது 'ரூட்' பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக மோதல்கள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்த மோதல் விவகாரம் ரயில்களிலும் தொடர்ந்து வருகிறது.

மோதலுக்கான பின்னணி

அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த புறநகர் ரயிலில், நேற்று முன்தினம் தியாகராஜா கல்லூரி மாணவர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். ரயில் வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே வந்தபோது, அதே ரயிலில் இருந்த அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், தியாகராஜா கல்லூரி மாணவர்களை நோக்கி, "ஐடி கார்டுகளைக் கழட்டுங்கள்" எனத் தகராறில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பு மாணவர்களும் ஒருவருக்கொருவர் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு கல்லூரி மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் ரயில் நிலையத்திலும், சக பயணிகளிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறையின் நடவடிக்கை

இந்த மோதல்குறித்துப் பெரம்பூர் இருப்புப் பாதை காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பத்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மோதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் நந்தகுமார் என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தில் தொடர்புடைய மற்ற மாணவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு மாணவர்களின் விவரங்களை அனுப்பி, அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.