தமிழ்நாடு

சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Ponmudi
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சு குறிப்பிட்ட மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தனிநபர் புகார் மனு

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடி மீது நடவடிக்கை எடுத்து அவரைத் தண்டிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

இந்த வழக்கானது மக்கள் பிரதிநிதிகள் (எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள்) மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு நீதிபதி சவுந்திர பாண்டியன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவு

மனுவை ஆய்வு செய்த நீதிபதி, இந்தப் புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்குப் போதுமான முகாந்திரம் இருப்பதாகக் கருதினார். இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணைக்காக வரும் மார்ச் 24-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்குச் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.