தமிழ்நாடு

4 ஆயிரம் பிரசவம்.. ஏழைகளிடம் பணம் வாங்குறதே இல்லை- கவனம் ஈர்க்கும் டாக்டர் பார்வதி

ஆடம்பர கிளினிக், மெடிக்கல், ஸ்கேன் சென்டர், குறுக்கு நெடுக்கே நடக்கும் நர்ஸ்கள் எவரும் இல்லை. பழைய குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்கிறார். வீட்டு ஹால்தான் கிளினிக். டாக்டர் பார்வதி என்றாலே எளிதாக வீட்டை அடையாளம் காட்டிவிடுகின்றனர் பொறையார் மக்கள்.

4 ஆயிரம் பிரசவம்.. ஏழைகளிடம் பணம் வாங்குறதே இல்லை- கவனம் ஈர்க்கும் டாக்டர் பார்வதி
doctor parvathy from Boraiyar
டாக்டர் பார்வதிக்கு 80 வயது. அதற்கான அடையாளங்கள் அவரிடமில்லை. ’50 வருஷமாக மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறேன். இன்னும் அலுக்கவில்லை' என்பவரிடம் அப்படி என்ன சிறப்பு? இத்தனை ஆண்டுகளாக ஏழைகளிடம் சிகிச்சைக்காக பணம் எதுவும் வாங்கியதே இல்லை. அன்புடன் 10 ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறார். சிகிச்சைக்காக வந்த ஒருவர் பிரியமுடன் கொடுத்த 500 ரூபாய்தான் இதுவரை வாங்கிய கட்டணத்தில் அதிகமான தொகையாம்.

மாவட்ட அளவில் முதலிடம்:

ஒரு குழந்தைக்கு சிகிச்சையளித்துக் கொண்டு இருந்தவரிடம் பேசினோம். "திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் பிறந்தேன். கூட பிறந்தவர்கள் ஏழு பேர். தனியார் கம்பெனியில் வேலை பார்த்த அப்பாவின் பணி மாறுதலால், பள்ளிப்படிப்பு கடலூரில் தொடர்ந்தது. பின்னர் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பியூசி படிப்பை முடித்து மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதால், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

22 வயதில் ஹவுஸ் சர்ஜன் முடித்து அங்கேயே சீனியர் ஹவுஸ் சர்ஜன் முடித்தேன். 1970-ல் எனக்கு திருவையாறைச் சேர்ந்த டாக்டர் சந்திரசேகருடன் திருமணம். அவருக்கு முதன்முதலில் வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக வாய்ப்பு கிடைத்தது. அது குக்கிராமம். மழைபெய்தால் ஒழுகும், ஓட்டுவீட்டில்தான் குடியிருந்தோம். அதன் பின்னர், அவருக்கு பொறையார் அரசு மருத்துவமனைக்கு பணி மாறுதலாக இங்கே வந்தோம். இந்த ஊரிலும் எந்த வசதியும் கிடையாது. எங்கே செல்ல வேண்டுமென்றாலும் மாட்டு வண்டியில்தான் செல்ல வேண்டும். மின்சாரமும் எப்போதாவது வரும். மெழுகுவத்தி வெளிச்சத்தில்தான் நானும் வீட்டில் பிரசவம் பார்ப்பேன். 1995 புயலின் போது ஒரு மாதம் மின்சாரம் இல்லை. அப்போது நான் பார்த்த ஒரு பிரசவம்கூட தோல்வியில்லை.

1973ல் எனக்கு கார்த்திக் என்ற ஆண் குழந்தை பிறந்தான். டெல்லி பிட்ஸ்பிலானியில் பி.இ. முடித்துவிட்டு பெங்களூரில் வேலை செய்து வருகிறார். மருமகள் உஷா கூகுள் டைரக்டராக இருக்கிறார். நாங்கள் இருவரும் மருத்துவத்தையே முழுநேரத்
தொழிலாக செய்து வந்ததால், இதுவரை வெளியூர் எங்கேயும் சென்றதில்லை. எங்கள் கஷ்டத்தைப் பார்த்ததாலோ என்னவோ, எங்கள் பையன் டாக்டருக்கு படிக்க விருப்பமில்லாமல் பி.இ. படித்தார்.

கணவருக்கு பணத்தாசை என்பதே கிடையாது:

ஓட்டு வீட்டில்தான் எங்களின் பல வருட வாழ்க்கை கழிந்தது. இத்தனை படிப்பு படித்தும் எங்களால் ஒரு நல்ல வீட்டில் வசிக்கமுடியவில்லையே என அப்போதெல்லாம் வருத்தப்பட்டுள்ளேன். அதன் பிறகு கணவருக்கு உடல்நலம் சரியில்லாமல் விருப்ப ஓய்வு பெற்றுவிட, வீட்டிலேயே இருவரும் மருத்துவம் பார்த்து வந்தோம். என் கணவருக்கு பணத்தாசை என்பதே கிடையாது.

“நாங்கள் இருவரும் மருத்துவத்தையே முழுநேரத் தொழிலாக செய்துவந்ததால், இதுவரை வெளியூர் எங்கேயும் சென்றதில்லை. ஊட்டி. கொடைக்கானல்கூட பார்த்ததில்லை.’ டெலிவரிக்கு வருபவர்களிடம் இன்ஸ்டால்மென்டில் பணம் வாங்கியிருக்கிறோம். 2014-ல் அவர் இறந்தார்.

அதன்பிறகு நான் மட்டுமே தனியாக மருத்துவம் பார்க்கத் தொடங்கினேன். இதுவரை 4 ஆயிரம் பிரசவம் பார்த்துள்ளேன். அதன்பிறகு கோவிட் சமயத்தில் கொஞ்சமும் பயப்படாமல் நோயாளிகளுக்கு அருகில் அமர்ந்து மருத்துவம் பார்த்தேன். எனக்கும் கொரோனா வந்தது. என் அருகில் இருந்து சாந்தி என்ற வேலைக்கார பெண்தான் பார்த்துக்கொண்டார். அதேபோல் மரகதம் என்ற பெண் ஒரு நர்ஸ் மாதிரி இருந்து நான் சிகிச்சையளிக்க உதவினார். பணத்தைவிட மக்கள் என் மீது பிரியமாக இருந்துகொண்டு 'இது நீங்கள் பிரசவம் பார்த்ததில் பிறந்த குழந்தை' என்றபடி தங்கள் மகன், மகள்களைக் காட்டும்போது, அப்போது எனக்குக் கிடைக்கும் சந்தோஷமே கோடி ரூபாய்க்கு இணையானதாக இருக்கும். குழந்தையில்லாமல் வந்த பலருக்கும் என் சிகிச்சையால் குழந்தை பிறந்து சந்தோஷமுடன் இருக்கின்றனர்.

ஸ்டெதாஸ்கோப்பை எடுக்காமலே வைத்தியம்:

ஸ்டெதாஸ்கோப்பை எடுக்காமலே, பேஷன்ட் வரும்போதே ஆஸ்துமா என்றால் மூக்கை பார்த்தும், தைராய்டு என்றால் குரலை வைத்தும் கண்டுபிடிப்பேன். ஹார்ட் அட்டாக் என்று வந்த பலரைக் காப்பாற்றி இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர்” என்றவரிடம், 'உங்கள் பொழுது போக்கு என்ன? என்று கேட்டோம்.

அதற்கு அவர், "கார்டனிங் எனக்குப் பிடிக்கும். அத்துடன் இளையராஜா இசை எனக்கு உயிர். என்னை வாழ வைத்துக் கொண்டிருப்பதே அவரது இசைதான். சந்தோஷத்திலும், துக்கத்திலும் என்னை அவரது பாடல்கள்தான் அமைதிப்படுத்துகிறது. அவரை எப்படியாவது பார்க்க முயற்சி எடுத்து வருகிறேன்” என்றார்.

தொடர்ந்து சிகிச்சைக்காக மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. மக்கள் அமரும் பகுதியில் லயன்ஸ் கிளப் சார்பில் பாராட்டிதழ், ரோட்டரி கிளப் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட வாழ்த்து மடல்கள் வரிசையாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது... அவரது பணிக்கு சான்றாக விளங்கின.

(கட்டுரை/ஆசிரியர்- ஆர்.விவேக் ஆனந்தன் , குமுதம் இதழ், மே 21,2025) ... இதுப்போன்ற மேலும் எக்ஸ்கூளூசிவ் ஸ்டோரிகளுக்கு குமுதம் இதழை வாங்கி படியுங்கள் / குமுதம் இதழை ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்யவும்.