தமிழ்நாடு

தொடர் விடுமுறை எதிரொலி: விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி!

சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர் விடுமுறை எதிரொலி: விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி!
Chennai Airport
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறைகள் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விமானங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி அண்டை மாநிலங்கள் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விமான டிக்கெட்டுகளுக்குத் தட்டுப்பாடு

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு, குறிப்பாக தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களில் இன்றும் நாளையும் (டிசம்பர் 23, 24) அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டன. இதனால், பயணிகள் திருவனந்தபுரம் வழியாகச் செல்ல முயன்ற நிலையில், அந்த விமானங்களிலும் டிக்கெட் தட்டுப்பாடு நிலவுகிறது.

அதிர்ச்சி அளிக்கும் கூடுதல் கட்டணம்

தமிழகத்திற்குள் செல்ல நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தால், பயணிகள் பெங்களூரு அல்லது திருவனந்தபுரம் வழியாக இணைப்பு விமானங்களில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயண நேரம் பல மணி நேரம் அதிகரிப்பதுடன், வழக்கமான கட்டணத்தை விடப் பன்மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, சென்னை-தூத்துக்குடி பயணத்திற்கு வழக்கமான கட்டணம் சுமார் ரூ.4,100 ஆக இருக்கும் நிலையில், பெங்களூரு வழியாகச் சுற்றிச் செல்ல ரூ.13,400 வரை செலவாகிறது.

பயணிகளின் கோரிக்கை

கூடுதல் கட்டணம் மற்றும் அதிக பயண நேரத்தால் அவதிப்படும் பயணிகள், தமிழகத்திற்குள் போதிய அளவில் பயணிகள் பயணிக்கத் தேவையான கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.