தமிழ்நாடு

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் இபிஎஸ்தான்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

"அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் இருக்க முடியும்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் இபிஎஸ்தான்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
Udhayanidhi Stalin and Edappadi Palaniswami
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரத்தில் நேற்று (செப்.9) தனது தேர்தல் பயணத்தை ஆரம்பித்தார். செங்கல்பட்டு சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அதிமுகவை விமர்சித்த உதயநிதி

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், "அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது ஒரு பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி, அதன் ஓட்டுநரை அதிமுகவினர் மிரட்டியுள்ளனர். மற்ற சில இடங்களில் ஆம்புலன்ஸை நிறுத்தி ஓட்டுநர்களை அடித்துள்ளனர். இதைப் பார்த்து, 'உங்கள் அ.தி.மு.க. கட்சி ஆம்புலன்ஸில் செல்லும் நிலைமையில் இருக்கிறது. பா.ஜ.க.வின் அறுவை சிகிச்சையால், அ.தி.மு.க.வுக்கு ஐ.சி.யு.-வில் இருக்க வேண்டிய நிலைமை வரும். கடைசியில் உங்களைக் காப்பாற்ற நாங்கள்தான் வரவேண்டும்' என்று நான் கூறினேன். இதைச் சொன்னதற்கு, 'கொலை மிரட்டல் விடுத்ததாக' எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்" என்று குறிப்பிட்டார்.

‘இபிஎஸ் தான் அதிமுகவுக்கு நல்லது’

தொடர்ந்து பேசிய உதயநிதி, "நான் அவரைச் சொல்லவில்லை. அ.தி.மு.க.வைத்தான் சொன்னேன். உண்மையாகச் சொல்கிறேன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன், மன நலத்துடன் வாழ வேண்டும். அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் இருக்க முடியும். அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய நல்ல காரியமும் அதுதான். எங்களுக்கும் வேலை கொஞ்சம் சுலபமாக இருக்கும். அந்த இயக்கத்தை வழிநடத்துவதற்கு உங்களுக்கு மட்டும்தான் தகுதி இருக்கிறது" என்று கூறினார்.

"அ.தி.மு.க.வினர் இதை ஒத்துக்கொள்வார்களா எனத் தெரியாது. ஆனால் நான் முன்மொழிகிறேன், நீங்கள்தான் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளர்" என்றும் அவர் பேசினார்.