தமிழ்நாடு

விலை போகாத தர்பூசணி- கண்ணீருடன் நிலத்திலேயே அழித்த விவசாயி!

பயிர் செய்த தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வராததால், கண்ணீருடன் விவசாயிகள் தர்பூசணி பழங்களை விவசாய நிலத்திலேயே டிராக்டர் மூலம் ஓட்டி அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

விலை போகாத தர்பூசணி- கண்ணீருடன் நிலத்திலேயே அழித்த விவசாயி!
farmer destroy the watermelons by driving them with a tractor
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நம்பேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் வராததால் தர்பூசணி பழங்களை விவசாயி டிராக்டர் மூலம் ஓட்டி அழிக்கும் அவல நிலை ஏற்பட்டது.

ஏக்கருக்கு 60-70 ஆயிரம் செலவு:

வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தர்பூசணி பழங்களை விவசாயிகள் பயிர் செய்து இருந்தனர். இந்த நிலையில் தர்பூசணி பழங்களில் சுவையுடன் இருக்க ஊசி மற்றும் ரசாயனம் தடவப்படுவதாகவும், அத்தகைய தர்பூசணி பழங்களை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடு என்றும் சமூக வலைத்தளங்களில் சில காணொளிகள் வைரலாக பரவியது.

இந்நிலையில் வந்தவாசி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, சுமார் 1000 ஏக்கரில் பயிர் செய்த தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் வராததால் விவசாய நிலத்திலேயே டன் கணக்கில் தேங்கிய தர்பூசணி பழங்கள் வெடித்து அழுகியது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சாகுபடி செய்த தர்பூசணி பழங்களை வியாபாரிகள் வாங்க வராததால் மனம் உடைந்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்ற விவசாயி சுமார் 10 ஏக்கரில் தர்பூசணி பழங்களை டராக்டர் மூலம் ஓட்டி விவசாய நிலத்திலேயே அழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.

மேலும் நஷ்டம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் பலமுறை தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியும் தற்போது வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்ட திருவண்ணாமலை வட்டார விவசாயிகள், இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.