தமிழ்நாடு

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் உருவப் படத்தை திறக்கவுள்ளேன்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

“ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் உருவப் படத்தை திறக்கவுள்ளேன்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
CM Stalin
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகள் திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவைத் தலைமையேற்று நடத்தி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது வெளிநாட்டுப் பயணங்கள், பெரியார் குறித்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

ஜெர்மனி, இங்கிலாந்து பயணத் திட்டம்

விழாவில் பேசிய முதலமைச்சர், நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு இதுவரை ரூ. 10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளோம். எனது வெளிநாட்டுப் பயணங்களின் போது தமிழகத்தில் முதலீடு செய்யத் தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டுவதைப் பார்த்துள்ளேன். தற்போதைய பயணம் குறித்த கூடுதல் விவரங்களை நாளை விமான நிலையத்தில் விளக்குவேன்" எனக் கூறினார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை.யில் பெரியார் படம் திறப்பு

தனது வெளிநாட்டுப் பயணத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படம் திறக்கப்பட இருப்பதாகவும், அதைத் திறந்து வைப்பதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

"பெரியாரின் சிந்தனையை உலகம் தொடும் காட்சியை இந்தப் பயணத்தில் பார்க்கப் போகிறோம். உலகின் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்திருக்கக்கூடிய புகழ்மிக்க ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அறிவாசான் பெரியாரின் திருவுருவப்படம் என் கைகளால் திறந்து வைக்கப்பட உள்ளது. தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பேசியிருந்தாலும், அவருடைய பகுத்தறிவு, பெண் விடுதலை, அனைவருக்கும் சமம் போன்ற கருத்துக்கள் உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் உலகளவில் அங்கீகரிக்கப்படுவது நம் தமிழ்நாட்டுக்குப் பெருமை" என்று கூறினார்.

‘பீகாரின் நிலை தமிழகத்தில்..’

பீகாரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்பு வாக்காளர் திருத்தம் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த ராகுல் காந்தி பேரணி மேற்கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். "பீகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனைத் தடுத்து நிறுத்த என்.ஆர். இளங்கோ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்" என அவர் பாராட்டினார்.

மேலும் முதலமைச்சர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், "உங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வையுங்கள்" என்று அறிவுறுத்தினார்.