தமிழ்நாடு

பணத்திற்காக சொந்த பேத்தியைக் கடத்தி விற்ற தாத்தா- பாட்டி கைது!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணத்திற்காக சொந்த பேத்தியைக் கடத்தி விற்ற தாத்தா- பாட்டி கைது!
In Salem Child Kidnapping case Grandparents Arrested for Selling Their Own Granddaughter
சங்ககிரி அருகேயுள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம், குண்டங்கள் காடு பகுதியைச் சேர்ந்த ராஜா - மீனா தம்பதியரின் நான்கு வயது மகள் கவிஷா. கடந்த ஜூலை 30 அன்று, அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற குழந்தை, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ராஜா தனது குழந்தை காணாமல் போனதாக தேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது பணத்துக்காக விற்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பதை அறிந்த கடத்தல்காரர்கள், ஆகஸ்ட் 4 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆலமரத்து முனியப்பன் கோயில் பகுதியில் ஒரு முதியவரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு மாயமானர். அந்த முதியவர் குழந்தையைக் குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து தகவல் அறிந்த தேவூர் காவல்துறையினர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கில் குழந்தையின் தாத்தா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் ஏற்கெனவே ஆகஸ்ட் 4 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இன்று குழந்தையின் பாட்டி சாந்தி (55) என்பவரையும் தேவூர் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணைக்குப் பிறகு சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நான்கு வயதுப் பேத்தியைக் கடத்தி, பணத்துக்காக விற்றுவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய தாத்தா, பாட்டியே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.