தமிழ்நாடு

கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 18 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!
கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் குறித்து, மே 18 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தவெக நிர்வாகிகளின் குளறுபடி:

தமிழ்நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. கரூர் துயர நிகழ்வைப் பார்க்கும்போது உண்மையில் மனம் வருந்துகிறது. விஜய் பிரச்சாரக் கூட்டம் என்பது அவரைப் பார்க்க வேண்டி கூடிய கூட்டம் தான் அதிகம். இவர்களை முறைப்படுத்தி ஒருங்கிணைப்பு செய்ய வேண்டியவர்கள் தவெக கட்சியினர். அதைச் செய்யத் தவறிவிட்டனர் என்று திருமுருகன் காந்தி குற்றம் சாட்டினார்.

போலீசார் அறிவுறுத்திய குறிப்பிட்ட நேரத்தில் விஜய் வராமல் காலதாமதம் செய்த விளைவு இந்த கோரச் சம்பவம். கரூரில் ஏற்கனவே இருக்கும் அதிகமான கூட்டத்துடன், விஜய் நாமக்கல்லில் பேசி விட்டு அவருடன் வந்த கட்சியினர்களின் கூட்டத்தினால் நெருக்கடி ஏற்பட்டது.

இந்தக் கூட்டத்திற்குப் பாதுகாப்பு நடவடிக்கையை தவெக கட்சியினர் எதுவும் எடுக்கவில்லை. இதில் இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது, ஆனால் விஜய் பிரச்சார கூட்டத்தை ஒழுங்கு படுத்தத் தவறிய தவெக கட்சி நிர்வாகிகளின் அலட்சியம் தான் இப்படி ஒரு நிகழ்வுக்குக் காரணம்.

காவல்துறை மீது குறை சொல்வது தவறு:

கூட்ட நெரிசலுக்குக் காவல்துறையை மட்டும் குறை சொல்வது சரியல்ல என்று கூறிய திருமுருகன் காந்தி, தவெக கட்சி நிர்வாகிகள் ஒழுங்கு படுத்த தவறி விட்டு, காவல்துறையை குறை கூறுவது தவறு என்று திட்டவட்டமாகக் கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு என்பது கட்சித் தலைவரைப் பாதுகாப்பது. அங்கே உள்ள மக்களை, கட்சியினரை, ரசிகர்களைப் பாதுகாத்து ஒழுங்கு படுத்துவதை தவெக நிர்வாகிகள் செய்யத் தவறியதால் தான் இப்படி ஒரு கோரச்சம்பவம் நடந்தது.

முறையான நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்ததால் தான் பல உயிர்கள் காக்கப்பட்டு உள்ளன. அங்கே அந்த விபத்தில் ஏற்படும்போது, மீட்புப் பணியில் இருந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள், செவிலியர்கள், அரசுத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கோரிக்கைகள்:

தான் நேரில் சென்று காயம் அடைந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசியதாகக் குறிப்பிட்ட திருமுருகன் காந்தி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்தச் சந்திப்பின்போது தமிழக ஜனநாயக மக்கள் கட்சி, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், தமிழ் தேசிய ஆர்வலர்கள் எனப் பலர் உடன் இருந்தனர்.