தமிழ்நாடு

‘கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது’- விஜய் பேச்சுக்கு இலங்கை அமைச்சர் பதிலடி!

“கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது, அதை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

‘கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது’-  விஜய் பேச்சுக்கு இலங்கை அமைச்சர் பதிலடி!
Sri Lankan minister responds to Vijay's speech
தவெக மாநாட்டில் கச்சத்தீவு குறித்து விஜய் பேசிய நிலையில், “அரசியலுக்காக கச்சத்தீவு குறித்து கூறப்படும் கருத்துகளை பொருட்படுத்தத் தேவையில்லை” என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மீனவர் பிரச்னைக்குத் தீர்வாக, கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்” என பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி இருந்தார்.

இலங்கை அமைச்சரின் பதில்

இந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்திர செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்றார். அவரிடம் கச்சத்தீவு குறித்து விஜய் பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், “தென்னிந்தியாவில் இப்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளதால், வேட்பாளர்கள் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல்வேறு கருத்துகளைப் பேசி வருகின்றனர். கச்சத்தீவு குறித்து அவர்கள் பேசுவது இது முதல் முறை அல்ல. இதேபோல பலமுறை தேர்தல் மேடைகளில் பேசியுள்ளனர். ஆனால், தேர்தல் மேடைகளில் கூறுவதால் இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

முதலாவதாக, கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமான தீவு. அது ஒருபோதும் மாறப்போவதில்லை. கச்சத்தீவு இன்றும், என்றும், நாளையும் இலங்கைக்குச் சொந்தமான தீவாகும். கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதைப் பார்த்தேன். அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்திய அரசோ அல்லது அமைச்சர்களோ அதிகாரபூர்வமான கருத்துகளைத் தெரிவித்தால் மட்டுமே அதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேச முடியும். இத்தகைய தேர்தல் காலக் கருத்துகளை இலங்கை அரசு பொருட்படுத்தாது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.