தமிழ்நாடு

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தை உள்பட 3 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தை உள்பட 3 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
Kavin muder case
ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் (27), கடந்த ஜூலை 27-ம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோரை முதலில் நெல்லை மாநகர போலீசார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மூன்றாவது நபர் கைது

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கையில் எடுத்த பிறகு, அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டன. போலீசார் நடத்திய விசாரணையில், கொலைக்குப் பிறகு சுர்ஜித் தனது பெரியம்மா மகனான தூத்துக்குடியைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் ஜெயபாலை (29) தொடர்பு கொண்டது தெரியவந்தது. கவினைக் கொலை செய்யப் பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த சட்டையை மறைத்து வைக்கவும், தப்பித்து வந்த பைக்கின் பதிவு எண்ணை மாற்றவும் ஜெயபால் உதவியது அம்பலமானது. இதையடுத்து, கொலைக்கான தடயங்களை மறைத்ததாக ஜெயபாலும் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் பரபரப்பான வாக்குமூலங்கள்

காவல் விசாரணை முடிந்ததும் கைதான 3 பேரும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பரபரப்பான முறையீடுகளை முன்வைத்தனர். சுர்ஜித், “போலீசார் என்னை அடிக்கவில்லை, ஆனால் என் குடும்பத்தினரையும் வழக்கில் சேர்த்து சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டினர்” என்று முறையிட்டார். அவரது தந்தை சரவணன் “என்னிடம் 2 நிமிடம் மட்டுமே விசாரணை நடத்தினர்” என்றார். ஜெயபால், “என்னை எந்த வழக்கில் கைது செய்தார்கள் என்றே தெரியவில்லை” என்று கூறியது நீதிமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

காவல் நீட்டிப்பு

இதையடுத்து, மூவரின் வாக்குமூலங்களையும் நீதிபதியே நேரடியாகப் பதிவு செய்துகொண்டார். பின்னர், மூவரையும் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை 13 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, இன்றுடன் அவர்களது நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், மூவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரின் நீதிமன்றக் காவலையும் மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க உள்ளதாக சுர்ஜித் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.